search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

    உடுமலை அரசு மருத்துவமனையில் 144 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. உடுமலை நகராட்சியில் 12 பேர் மற்றும் ஊரக பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

    அரசு மருத்துவமனையிலும், வீட்டு தனிமையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதோடு கிராமப் பகுதிகளில் அதிக அளவு காணப்படுவதால் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    உடுமலை அரசு மருத்துவமனையில் 144 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாதவாறு புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் அலையின்போது அரசு கல்லூரி வளாகத்தில் கொரோனா தொற்று சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. தற்போது மூன்றாம் அலை தொடங்கியுள்ள நிலையில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மீண்டும் அரசு கல்லூரி வளாகத்தில் கொரோனா கேர் சென்டர் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

    இங்கு குறைந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 20 ஆக்சிஜன் படுக்கை உட்பட 104 படுக்கைகள், நோயாளிகளுக்கு தனித்தனியாக சிகிச்சை அளிக்கும் வகையில் தடுப்புகள், கழிப்பறை, குளியல் அறை என அனைத்து வசதிகளுடன் தயாராகி வருகிறது.

    நகராட்சி சார்பில் கேர் சென்டர் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. அதே போல் கிராமப்பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சமுதாய நலக்கூடங்களை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பாதித்தவர்கள், சிகிச்சைக்காக எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அலைகழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கி உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 19 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள மக்களுக்கு உதவும் வகையில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அருகிலுள்ள மனமகிழ் மன்றம் பெருந்தொற்று வகைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

    மேலும் அரசு மருத்துவமனையில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினமும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வது, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 

    முகக்கவசம், தனிமனித இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுவது மற்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும். மூன்றாவது அலையை சமாளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளது. 

    அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் படுக்கை மற்றும் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அரசு கல்லூரி மற்றும் கிராமப்பகுதிகளில் ‘கோவிட் கேர் சென்டர்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×