search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கொள்ளையடிக்கப்பட்ட வீடு
    X
    நகை கொள்ளையடிக்கப்பட்ட வீடு

    மேல்மலையனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை

    மேல்மலையனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகன் வெங்கடேசன் (58) கோவில்புரையூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி விஜயா(55) தாயனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலையில் இருவரும் சென்னையில் உள்ள தன் மகனைப் பார்ப்பதற்காக சென்றிருந்தனர். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அலமாரியிலிருந்த 34 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் அதே ஊரில் முருங்கைமரத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மணி (64). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 26 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இரண்டு வீடுகளிலும் திருடு போனது 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 4 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து இருதரப்பிலும் வந்த புகாரின்பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே திருட்டு நடந்த வீடுகளில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி பார்வையிட்டார். மேலும் விழுப்புரத்திலிருந்து மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து ஓடி கடைவீதியில் படுத்துக்கொண்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

    திருடர்களைப் பிடிப்பதற்கு அவலூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×