search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நொய்யல் ஆற்றை பாதுகாக்க புதிய திட்டங்கள் - ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    நொய்யல் பாதுகாப்பு தொடர்பான முதல்கட்ட ஆலோசனை கூட்டம் ‘ஜூம்‘ மீட்டிங் வாயிலாக நடந்தது.
    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், கரூர் , ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை கடந்து சென்று காவிரியில் கலக்கும் நொய்யல் ஆற்றை மீட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

    4 மாவட்டங்களிலும் நொய்யலை சீராக பராமரித்து காப்பாற்ற நொய்யல் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுதுளி அறங்காவலர் வனிதாமோகன், திருப்பூர் ஜீவநதிநொய்யல் சங்க தலைவர் ரத்தினசாமி உட்பட பல்வேறு அமைப்பினரும் உறுப்பினராக இணைந்துள்ளனர்.

    இந்தநிலையில் நொய்யல் பாதுகாப்பு தொடர்பான முதல்கட்ட ஆலோசனை கூட்டம் ‘ஜூம்‘ மீட்டிங் வாயிலாக நடந்தது. அதில் இயற்கை வளங்களை அழிக்கும் செயல்களை தடுப்பதுடன் கோர்ட்டு மூலம் நிவாரணம் தேட வழக்கறிஞர் குழுவை அமைக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

    இதுகுறித்து நொய்யல் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் கூறியதாவது:

    4 மாவட்டங்களிலும் நொய்யல் ஆற்றின் எல்லையை கண்டறிய வேண்டும். கிளை நதிகள், குளங்கள், வரத்து வாய்க்கால்களையும் சர்வே செய்து அளவுகளை வரையறுக்க வேண்டும். அரசு திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு நொய்யல் சீரமைப்பதற்கான திட்ட விவரங்களை பெற்று பின்பற்ற வேண்டும்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் தலா ஒரு துணை செயற்குழுவை உருவாக்குவது, அவர்களை உறுப்பினராக கொண்ட மாவட்ட குழுவை உருவாக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் கழிவுநீரை, முழுமையாக சுத்திகரித்து  மறுசுழற்சி முறையில் பயன்படுத்த திட்டமிட வேண்டும். 

    முறைகேடாக நடக்கும் மண் வளங்களை சுரண்டும் பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் நொய்யல் நதியின் வரலாறு, நாகரீகம் குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். 

    குறிப்பாக, பள்ளி குழந்தைகள் மூலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும், நொய்யல் பாரம்பரியம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
    Next Story
    ×