
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
சேலம் மாவட்ட அ.தி.மு.க. புறநகர் அலுவலகத்தில் இன்று காலை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விரைவில் நடைபெற இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக ரேசன் கடைகளில் அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு எப்படி இருக்கின்றது என்று ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராசிபுரம் பகுதி மக்கள் தெளிவாக கூறி இருக்கிறார்கள். இப்படிதான் தமிழகத்தில் பல இடங்களில் ரேசன் கடைகளின் மூலமாக வழங்கப்படுகின்ற பொங்கல் பரிசு தொகுப்பு இருக்கிறது.
2½ டன் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய வெல்லம் மிகவும் மோசமாக இருக்கிறது என சொல்லி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ரத்து செய்திருக்கிறார்கள். ஓமலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் உள்ள செவ்வாய்சந்தை ரேசன் கடையில் தரமற்ற வெல்லம் கொடுத்து இருக்கிறார்கள். பொதுமக்கள் எப்படி இந்த வெல்லத்தை பயன்படுத்தி பொங்கல் வைக்க முடியும். மேலும் எடை குறைவாக பொருட்கள் கொடுக்கிறார்கள்.
ரேசன் கடை ஊழியர்களிடம் சரியாக பொருட்கள் தரவில்லை, சரியான எடை இல்லை என பொதுமக்கள் சண்டைக்கு போகிறார்கள். ஊழியர்கள் எல்லாம் அரசாங்கம் கொடுக்கிற பொருளை அப்படியே தருகிறோம். நாங்கள் எதுவும் இதில் கொள்முதல் செய்யவில்லை என கருத்து கூறுகிறார்கள். நாளை ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெகிழி பை ஒழிக்க வேண்டும் என நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்தோம். அபராதம் விதித்தோம். நாங்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தை தி.மு.க. மீண்டும் தொடங்கியது ஒரு விளம்பரத்தை தேடினார்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தி.மு.க. சொன்னது. ஆனால் மக்களுக்கு வழங்கப்படுகின்ற பொங்கல் பொருள் வைக்கப்பட்ட பையில் ஹிந்தியில் எழுதப்பட்டு இருக்கிறது. எனவே தி.மு.க. பேசுறது ஒன்னு, செயல்படுவது ஒன்னு.
நம்ம தமிழ்நாட்டில் இந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நம்முடைய உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கினால் நம்முடைய மக்கள் பயன்பெறுவார்கள். வடநாட்டில் இருந்து இந்த பொங்கல் தொகுப்பு பொருட்கள் வாங்கி நம்முடைய மக்களுக்கு கொடுக்கிறார்கள். இதற்கு காரணம் கமிஷன் அதிகமாக கிடைக்கிறது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் இதுதான் தி.மு.க.வின் தாரக மந்திரமாக இப்போது இருக்கிறது.
ரூ.33-க்கு கரும்பு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே பயனாளிகளுக்கு நல்ல கரும்பு வாங்கி கொடுத்து இருக்கலாம். அதிலும் ஊழல் செய்திருக்கிறார்கள். ஒரு கரும்புக்கு 15 ரூபாய் இந்த அரசாங்கம் ஊழல் செய்திருக்கிறது. அப்படி என்றால் இதில் மட்டும் 30 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக தெரியவருகிறது. ஆகவே இப்படி பொங்கல் தொகுப்பு பெயரில் தி.மு.க. அரசு கொள்ளையடித்தது தான் மிச்சம். பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க பெறவில்லை.
ஏற்கனவே நான் பேசிய பிறகும் இதே பொருளை தான் கொடுக்கிறார்கள். மாற்று பொருள் கொடுக்கவில்லை. 20 வகையான பொங்கல் தொகுப்பு பொருள் கொடுக்கத்தான் பையை வாங்குகிறார்கள். இதில் ஒரு பையின் விலை 60 ரூபாய் என்கிறார்கள். ஆனால் ஒரு பையின் விலை ரூ.30 இருக்கும். எனவே ஒரு பையில் 30 ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கிறது. இதெல்லாம் எனக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் குறிப்பிடுகிறேன்.
ஏழை, எளிய மக்கள் பயன்படுத்துவதற்காக வேட்டி, சேலை பொங்கல் பண்டிகையில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. ராஜேந்திர பாலாஜி மீதான பொய் வழக்கு திட்டமிட்டு போடப்பட்டது. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறையினரை தவறாக பயன்படுத்தி வருகிறது.
தற்போது தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியும் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டவை தான். தமிழக அரசு கொரோனா பரவலை சரியான வழியில் தடுக்க தவறிவிட்டது. ஏற்கனவே கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதை பயன்படுத்தி தான் தற்போது கட்டுப்படுத்தினார்கள் தனியாக எதுவும் வாங்கவில்லை.
ஆன்லைன் ரம்மி என்பது 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு சூதாட்டம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஐகோர்ட்டில் சரியாக வாதாடாததால் எதிர்தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. சட்டதுறை அமைச்சர், நாங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வோம் என சொல்கிறார். ஆனால் இன்னமும் தடைசெய்யவில்லை. இதுபோல் முதல்-அமைச்சர், நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வாங்குவதற்கு மேல்முறையீடு செய்து இருக்கிறோம் என சொல்கிறார். உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கி 5 மாத காலம் ஆகிவிட்டது. இன்னமும் தடையாணை வாங்க முடியவில்லை.
ஆனால் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மட்டும் 8 தனிப்படை அமைக்கிறார்கள். நேற்று கூட ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இறந்திருக்கின்றார். இதை ரத்து செய்வதற்கு அம்மாவுடைய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் இப்போது தடையாணை வாங்காமல் கிடப்பில் போட்டு விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.