search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் இன்றுகாலை முதல் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. படிப்பாதையில் நடந்து வந்த பக்தர்கள்
    X
    பழனியில் இன்றுகாலை முதல் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. படிப்பாதையில் நடந்து வந்த பக்தர்கள்

    3 நாள் தடைக்கு பிறகு பழனியில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம்

    3 நாள் தடைக்கு பின்பு இன்று பழனியில் அதிக அளவு பாதயாத்திரை பக்தர்கள் குவிந்ததால் நகரமே திக்குமுக்காடியது.
    பழனி:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரத்தில் 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    இதனால் கடந்த 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டன. பழனியில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா வருகிற 12ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 18ந்தேதி நடக்கிறது. இதனையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர்.

    வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பழனி முருகனை தரிசிக்க முடியும் என்பதாலும் வருகிற வெள்ளிக்கிழமை முதல் கோவில்கள் திறப்புக்கு அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.

    மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பழனி முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் குவியத் தொடங்கினர்.

    கடந்த 2 நாட்களாக பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். நேற்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் வெறிச்சோடி கிடந்த சாலைகளில் பக்தர்களின் கூட்டம் மட்டுமே தென்பட்டது. ஆங்காங்கே போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி கொரோனா விதிகளை பின்பற்றி செல்லுமாறு எச்சரித்தனர்.

    நேற்று இரவே பழனி அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர். இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டதும் அவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதே போல படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அடுத்து வரும் நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தைப்பூசக் கொடியேற்றம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கொடியேற்றம் உள்பட 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் குறைந்த அளவு பக்தர்களை அனுமதிப்பதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதா? என்பது குறித்து கோவில்நிர்வாகம் முறையான அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. எனவே பழனி நோக்கி குவிந்து வரும் பாத யாத்திரை பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×