search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திண்டுக்கல் அருகே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்து வாலிபர் பலி

    திண்டுக்கல் அருகே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் சரக்கு வாகனம் புகுந்ததில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தவண்ணம் உள்ளனர். தற்போது வார இறுதி நாட்களில் கோவில்களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் மற்ற 4 நாட்களில் கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்குகு கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.

    இதனால் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் பழனி நோக்கி நடந்து சென்றவண்ணம் உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள மாவூத்தன்பட்டியை சேர்ந்த சங்கையா மகன் சதீஷ்குமார் (வயது24). இவர் தனது தாயார் பழனியம்மாளுடன் பழனி கோவிலுக்கு நேற்று மாலை பாதயாத்திரையாக செல்லத் தொடங்கினார். இன்று காலை செம்பட்டி- ஒட்டன்சத்திரம் சாலையில் குயவநாயக்கன்பட்டி பகுதியில் அவர்கள் மேலும் சில பக்தர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பக்தர்களின் உடமைகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு சரக்கு வாகனம் அந்த கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே தனது தாயார் கண் முன் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் மதுரை காளவாசலை சேர்ந்த கண்ணன் மகன் ஐஸ்வர்யா (20), மதுரையை சேர்ந்த ரகுராம் (45) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். ஐஸ்வர்யா ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியிலும், ரகுராம் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×