search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்.
    X
    கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்.

    விளைந்த கரும்புகளை விற்க வியாபாரிகளுக்காக காத்திருக்கும் விவசாயிகள்.

    பொங்கல் பண்டிகைக்காக அறுவடை செய்யப்பட்ட கரும்புகளுக்கு உரியவிலை கிடைக்குமா? என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையோர பகுதிகளில் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

     நடப்பாண்டு கொட்டித்தீர்த்த மழையையும் தாங்கி நல்ல நிலைமையில் வளர்ந்து தோகை உரிக்கப்பட்டு விற்பனைக்கு வசதியாக வயல்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன.

    தமிழ்நாட்டில் திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையோரத்தில் பயிரிடப்படும் கரும்கை தமிழகம் முழுவதும் விரும்பி வாங்கி செல்வர். இதனால் இந்த ஆண்டும் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் 350 ஏக்கருக்கு மேல்கரும்பு பயிர் செய்து உள்ளனர். 

    சொந்த நிலத்திலும், நிலத்தை குத்தகை முறையிலும் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வியாபாரிகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு முழுக்கரும்பு வழங்க உத்தரவிட்டதால் நல்ல விலைக்கு விளைவித்த கரும்பு விற்பனையாகும் என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.

    தமிழ்நாடு அரசும் கூட பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு ஒன்றுக்கு ரூ.33 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    ஆனால் நடைமுறையில் பொங்கல் பரிசாக வழங்குவதற்கு அதிக பட்சமாக கரும்பு ஒன்று ரூ.14-க்குதான் வாங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    கரும்பு கட்டுகளை வாங்க பிற மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் அரசுக்கு விற்ற விலையை விட குறைவான விலைக்கு கரும்புகளை கேட்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
     
    இதனால் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பயிர் செய்துள்ள கரும்பு விவசாயிகள் தவித்துக் கொண்டு உள்ளனர். 

    தமிழக அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த விலைக்கே வியாபாரிகளும் ஒருங்கிணைந்த முறையில் கேட்பதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலைக்கு கரும்பு விவசாயிகள் தவித்து கொண்டுள்ளனர்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வெளிமாவட்ட வியாபாரிகளை எதிர்நோக்கி திருக்காட்டுப்பள்ளி பகுதி கரும்பு விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
    Next Story
    ×