search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    2-வது தவணை கொரோனா தடுப்பூசி - திருப்பூரில் தயக்கம் காட்டும் பொதுமக்கள்

    கடந்த டிசம்பர் 17-ந் தேதி எதிர்பாராத வகையில் ஒரே நாளில் 4 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்து கடந்த ஜூலை மாதம் 74 பேர் இறந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஆகஸ்டு மாதம் 105 பேர் பலியாகினர். 

    அடுத்தடுத்து நடந்த தொடர் தடுப்பூசி முகாம், தொற்று பாதிப்பு பரவல் சற்று குறைந்ததால் செப்டம்பர் மாதம் 24 பேர் பலியாகினர். நவம்பர் மாதம் மேலும் பாதிப்பு குறைந்து 20 பேர் இறந்தனர்.

    டிசம்பர் முதல் வாரம் பாதிப்பு வெகுவாக குறைந்து முதல் வாரத்தில் 2 பேர் மட்டும் இறந்தனர். இதனால் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையினர் சற்று ஆறுதல் அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் 17-ந் தேதி எதிர்பாராத வகையில் ஒரே நாளில் 4 பெண்கள் உட்பட 6 பேர்  பரிதாபமாக இறந்தனர். அக்டோபரில் இறப்பு எண்ணிக்கை 24, நவம்பர் மாதம் 20, டிசம்பர் மாதத்தில் 27 ஆக அதிகரித்தது. இவர்களில் 18 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள்.

    இறந்தவரில் ஒரு ஆண் மட்டுமே 32 வயது உள்ளவர். மற்ற அனைவரும் 58 முதல் 60 வயதை கடந்தவர். 7 பேர் 80 வயதையும், 3 பேர் 90 வயதையும் கடந்தவர்கள்.

    6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து இறந்துள்ளனர். மற்ற 21 பேரும் அரசு மருத்துவ கல்லூரிஅரசு தலைமை மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் இருந்து இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    டிசம்பர் மாதம் இறந்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு இணைநோய் இருந்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசியை முழுமையாக செலுத்தாமல் ஒரு தவணை மட்டுமே செலுத்தியிருந்ததால் தொடர் சிகிச்சையில் இருந்தும் மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினை சிலருக்கு ஏற்பட்டது. 

    கொரோனா மற்றும் இணைநோய்க்கான சிகிச்சையை ஒரே நேரத்தில் உடல் எடுத்து கொள்ளாததால் இறப்பை தழுவ நேர்ந்துள்ளது. 60 வயதை கடந்தவர் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தொழில் நகரமான திருப்பூர் ‘ஒமைக்ரான்’ பரவலை, விரட்டுவதற்கான முனைப்பில் உள்ளது. ஒமைக்ரான் பரவல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவத் துவங்கினால் அது திருப்பூருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் தொழில்முனைவோரிடம் உள்ளது.

    தொற்றில் இருந்து நம்மை காப்பாற்ற ஒரே ஆயுதம், தடுப்பூசி. திருப்பூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 100 சதவீதத்தை விரைவில் நெருங்கும். 

    அதேசமயம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை இன்னும் 60 சதவீதத்தை கூட நெருங்கவில்லை. தொற்று ஏற்படுவோருக்கு உயிரிழப்பைத் தவிர்ப்பதில் தடுப்பூசியின் பங்கு மகத்தானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    நாட்டில் இதுவரை 145 கோடி தவணைகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வரும் 10-ந் தேதி தொடங்கி 3-வது தவணை (பூஸ்டர் டோஸ்) முன்களப் பணியாளர்களுக்கும் இணைநோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட உள்ளது. 

    திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட 17 மெகா தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

    3-வது தவணை தடுப்பூசி அவசியம் என்ற நிலையில், இன்னும் மூத்த குடிமக்கள் பலர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தாத நிலை உள்ளது. 

    இரண்டாவது தவணை, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மூத்த குடிமக்கள் முன்வர வேண்டும். இணைநோய்களின் அச்சம் காரணமாக பலர், தடுப்பூசிக்கு தயங்குகின்றனர். 

    இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டால்தான் பாதுகாப்பு உறுதிப்படும் என்பதை உணர்ந்து இரண்டு தவணை தடுப்பூசிகளை கட்டாயம் மூத்த குடிமக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இணைநோயுள்ளவர்களும் மூன்றாம் தவணையை செலுத்திக்கொள்ளலாம். வீட்டில் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை அவர்களது வாரிசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

    தற்போது 15 -18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர் எவ்வித தயக்கமுமின்றி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

    முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றுடன் தடுப்பூசி தவணைகள் விஷயத்திலும் அலட்சியம் கூடாது. மூன்றாவது அலை பெரிதாக உருவெடுக்கும் முன்பே சீற்றத்தை தணித்துவிட வேண்டும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே முக்கியமானதாக இருக்கும்.
    Next Story
    ×