search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முக ஸ்டாலின்
    X
    சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முக ஸ்டாலின்

    42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    கொரோனா தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி, ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல ஏதுவாக சிறப்பு கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்துதல், கோவிட் தடுப்பூசிகளை தகுதியான அனைவருக்கும் செலுத்திட மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கும், பரிசோதனைகளுக்கு பிறகு கொரோனா பாதுகாப்பு, சிகிச்சை மையங்களுக்கோ அல்லது மருத்துவமனைகளுக்கோ அழைத்து செல்ல ஏதுவாக 250 கார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் 12.5.2021 அன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டது.  தேசிய அளவில் வரவேற்பினை பெற்ற இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டது.

    மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற  ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் இந்த  கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு அரசிற்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டினை தெரிவித்தார்.

    இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், கொரோனா தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு ஓட்டுநர் மற்றும் 1 கொரோனா களப்பணியாளர் கொரோனா கவச உடை அணிந்து பணியில்  ஈடுபடுவர். இவர்கள்  கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கும், பரிசோதனைகளுக்கு பிறகு கொரோனா பாதுகாப்பு (அல்லது) சிகிச்சை மையங்களுக்கோ (அல்லது) மருத்துவமனைகளுக்கோ அழைத்து செல்வர்.

    இந்த வாகனத்தில், தொற்று பாதிக்கப்பட்டவர்களால் ஓட்டுநர் மற்றும் கொரோனா களப்பணியாளருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். இச்சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை பெறுவதற்காக 1913 என்ற கட்டணமில்லா எண்ணிற்கும், 044-25384520 மற்றும் 044-46122300  ஆகிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

    மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    திருவொற்றியூரில் உள்ள 14 வார்டுகளுக்கு- 3

    மணலியில்  7 வார்டுகளுக்கு- 2

    மாதவரத்தில் 12 வார்டுகளுக்கு- 2

    தண்டையார்பேட்டையில் 15 வார்டுகளுக்கு- 3

    ராயபுரத்தில் 15 வார்டுகளுக்கு- 3

    திரு.வி.க. நகரில் 15 வார்டுகளுக்கு- 3

    அம்பத்தூரில் 15 வார்டுகளுக்கு-  3

    அண்ணாநகரில் 15 வார்டுகளுக்கு- 3

    தேனாம்பேட்டையில்  18 வார்டுகளுக்கு- 3

    கோடம்பாக்கத்தில்  16 வார்டுகளுக்கு- 3

    வளசரவாக்கத்தில் 13 வார்டுகளுக்கு- 3

    ஆலந்தூரில் 12 வார்டுகளுக்கு- 3

    அடையாறில் 13 வார்டுகளுக்கு- 3

    பெருங்குடியில்  11 வார்டுகளுக்கு- 3

    சோழிங்கநல்லூரில் 9 வார்டுகளுக்கு- 2

    மொத்தம் 200 வார்டுகளுக்கு- 42

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, ஏ.எம்.வி. பிரபாகரராஜா எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×