search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி
    X
    சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி

    ஒமைக்ரானை சமாளிக்க தமிழக அரசு தயார்- கவர்னர் உரையில் அறிவிப்பு

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 42.99 லட்சம் பேர் இதுவரை பயன் அடைந்துள்ளதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    முன்னதாக 9.52 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபைக்குள் அமர்ந்து இருந்தனர்.

    இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதற்காக காலை 9.59 மணிக்கு அவர் கலைவாணர் அரங்கத்துக்கு வந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அரங்கத்துக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் சபாநாயகர் இருக்கையில் கவர்னர் ஆர்.என்.ரவி
    அமர்ந்தார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கையில் சபாநாயகர் அப்பாவு அமர்ந்து இருந்தார்.

    காலை 10 மணிக்கு சட்ட சபை கூட்டம் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்றனர். அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை ஆங்கிலத்தில் வாசிக்க தொடங்கினார்.

    கவர்னர் உரையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்கள் வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி கொரோனா 2-ம் அலையை திறம்பட கையாண்ட முதல்- அமைச்சரை பாராட்டுகிறேன்.

    மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்சிஜனும், அத்தியாவசிய மருந்துகளும் கிடைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.

    மாநில பொருளாதாரம் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் தொற்றை இந்த அரசு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது.

    ஒமைக்ரான் வைரஸ்


    ஒமைக்ரான் மற்றும் அதன் மீதான சவால்களை சமாளிக்க தமிழக அரசு முழுமையாக தயார் நிலையில் உள்ளது.

    ஒமைக்ரானை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் தடுப்பூசி போடும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 86.95 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.543 கோடி வந்த நிலையில் ரூ.541.64 கோடி நிதி செலவழிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும் மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியையும் மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கிய 4,482 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 42.99 லட்சம் பேர் இதுவரை பயன் அடைந்துள்ளனர்.

    கொரோனாவால் உயிரிழந்த 27 ஆயிரத்து 432 குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

    கல்வி நிறுவனங்கள் அருகே போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவு நீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

    அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு இருக்கும். அதே நேரத்தில் நமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வழங்குவதை குறைந்தபட்சம் 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும்.

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

    மீனவர்களின் எந்திர படகுகளில் தகவல் தொடர்பு கருவிகளை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

    சுற்றுச்சூழலை பாதிக்காமல் அரசின் வருவாயை திரட்ட இயற்கை வளம் மேலாண்மை திட்டம் வகுக்கப்படும்.

    இரு மொழி கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிப்பதில் உறுதியுடன் உள்ளது.

    மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

    தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதில் தமிழக அரசு முனைப்புடன் உள்ளது.

    145 பெரியார் சமத்துவ புரங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை நவீனப்படுத்தும் சிறப்பு திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

    24,344 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர்கள் அனைவருக்கும் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த கோவில் நிலங்களை அரசு மீட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×