search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி சிலை
    X
    கருணாநிதி சிலை

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகே கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை

    நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில் சிலைகள் வைக்க யாரும் முடிவெடுத்துள்ளார்களா என்பது குறித்து விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
    சென்னை:

    பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமெனவும், அனுமதி பெற்று வைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகளைச் சுற்றி பூங்கா அமைத்து பராமரிக்கவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த ஏ.திருமுருக தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், திருப்பூர் ரெயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் சிலை வைக்க திட்டமிடப்படுவதாகவும், இது நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது எனவும் எழுதியிருந்தார்.

    இந்த கடிதத்தை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்குடன் இணைத்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில் சிலைகள் வைக்க யாரும் முடிவெடுத்துள்ளார்களா, சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா? என தமிழக உள்துறை செயலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. க.செல்வராஜ் அளித்த விண்ணப்பத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியே மாவட்ட ஆட்சியர் நிராகரித்துவிட்டார், என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரின் கடிதமும் தாக்கல் செய்யப்பட்டது.

    இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என கூறி வழக்கை முடித்துவைத்தார்.

    Next Story
    ×