
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தேக்கம்பட்டி ஊராட்சியில் சேர்வராயன் மலை தொடரை ஒட்டியுள்ள ஸ்ரீ தாஸ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு வருடமும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின்போது ஆஞ்சநேயரின் முன்னால் பெரிய பாத்திரத்தில் நெய் ஊற்றி வைத்து அதில் தெரியும் ஆஞ்சநேயரை பார்த்து தரிசித்தால் நினைத்தது நிறைவேறும் என்ற ஐதீகம் உள்ளது.
மேலும் நெய்யில் ஆஞ்சநேயரின் உருவம் தெளிவாக தெரிந்தால் மழை வளத்துடன் அப்பகுதி செழிக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி தேர் பவனி நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்பு ஆஞ்சநேயருக்கு 1008 வடைகள் சாத்தியும், 108 சங்காபிஷேகம் செய்தும், 9 வகையான தீபாராதனையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நெய் தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆஞ்சநேயர் முன்னால் சுமார் 100 லிட்டர் நெய்யை அகல பாத்திரத்தில் ஊற்றி வைத்தனர்.
இந்த வழிபாட்டின்போது பக்தர்கள் ஆஞ்சநேயரை நெய்யில் பார்த்து தரிசனம் செய்தனர். அப்போது ஆஞ்சநேயரின் உருவம் நெய்யில் பிரகாசமாக தெரிந்ததை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதில் திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்போர் பங்கேற்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டனர்.