search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரை சிலைமான் வாலிபர் கொலையில் 5 பேர் கைது- கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

    மதுரை சிலைமான் வாலிபர் கொலையில் கைதான 5 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
    மதுரை:

    மதுரை சிலைமான் போலீஸ் சரகத்துக்குட்பட்ட கல்மேடு கருப்பப்பிள்ளையேந்தல் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பிரேம்குமாரை கடத்தி சென்றனர். சக்கி மங்கலம் அரசு பள்ளி அருகே பிரேம்குமாரை ஆயுதங்களால் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து பிரேம் குமாரின் தந்தை வழிவிட்டான் போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் கல்மேடு களஞ்சியம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்ற வட்டகுண்டன் (23) என்பவருக்கும், பிரேம் குமாருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதும், இந்த முன்விரோதத்தில் தான் கொலை நடந்து இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் சந்தேகத்தின் பேரில் சக்கிமங்கலம் கார்த்திக் கண்ணன் என்ற கருவாடு (22), சிலைமான் அருண்குமார் (21), ரமேஷ் (23), கல்மேடு மணிகண்டன் (25), தர்‌ஷன் என்ற சமய முத்து (21) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அவர்கள் தமிழரசனுடன் சேர்ந்து பிரேம்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தமிழரசன் தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதான 5 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழரசனை முன் விரோதத்தில் பிரேம்குமார் அரை நிர்வாணப்படுத்தி, செல்போனை பறித்து சென்றார். இதனால் அவமானம் அடைந்த தமிழரசன், நண்பர்களான எங்களிடம் இதனை தெரிவித்து வேதனைபட்டார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    பின்னர் தமிழரசனை அழைத்து கொண்டு பிரேம் குமார் வீட்டுக்கு சென்றோம். அங்கு பிரேம்குமாரின் தந்தை வழிவிட்டான் மட்டுமே இருந்தார். அவரிடம் பிரேம்குமாரின் செயல் குறித்து கூறினோம். அவர் வீட்டில் இருந்த தமிழரசனின் செல்போனை எடுத்து கொடுத்தார்.

    அதனை வாங்கி விட்டு புறப்பட்டபோதும் தமிழரசன் அடைந்த அவமானத்தை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே மீண்டும் பிரேம்குமார் வீட்டுக்கு சென்றோம். அப்போது அங்கு அவர் இருந்தார். நாங்கள் மோட்டார் சைக்கிளில் பிரேம்குமாரை கடத்தி சென்று சக்கிமங்கலம் அரசு பள்ளி அருகே வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி விட்டோம். தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×