
திருவொற்றியூர்:
மணலி புதுநகர் அருகேயுள்ள சோழவரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48).
விளாங்காடுபாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் வயர் மேன் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு அருமந்தை பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அம்மன் தாங்கல் ஏரிக்கரையோரம் உள்ள டிரான்ஸ் பார்மரில் பழுது பார்க்க பெருமாள் சக ஊழியர்களுடன் சென்றுள்ளார். டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்து விட்டு பெருமாள் கீழே இறங்கிய போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கிவீசப்பட்ட அவரை சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பெருமாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.