search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாக்குதலில் காயமடைந்த கண்டக்டர் அங்கமுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி.
    X
    தாக்குதலில் காயமடைந்த கண்டக்டர் அங்கமுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி.

    ரூ.1 பாக்கி தராததால் தகராறு- பல்லடத்தில் அரசு பஸ் கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்

    தாக்குதலில் காயமடைந்த அங்கமுத்துவை பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
    பல்லடம்:

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 38). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் செல்லும் டவுன் பஸ்சில் பணியில் இருந்தார்.

    இந்தநிலையில் செட்டிபாளையம் சென்றுவிட்டு மீண்டும் பல்லடம் நோக்கி பஸ் திரும்ப வந்து கொண்டிருந்தது. பஸ்சை கல்யாணசுந்தரம் என்பவர் ஓட்டி வந்தார்.

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி பிரிவு பகுதியில் வரும் போது அய்யம்பாளையம் பகுதியில் உள்ள பிரபல பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரதீஸ் (20), பிரணேஷ்வரன் (20), செல்வம் (20) ஆகியோர் ஏறினர்.

    குடிபோதையில் இருந்த அவர்கள் படியில் தொங்கியவாறு முகக்கவசம் அணியாமல் பயணித்தனர்.பின்னர் ஆலமர பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அப்போது  அவர்கள் கண்டக்டருக்கு ரூ.1 பாக்கி கொடுக்க வேண்டியது இருந்தது. இதையடுத்து அவர்களிடம் கண்டக்டர் அங்கமுத்து ஒரு ரூபாயை கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 3பேரும் அங்கமுத்துவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    மேலும் தப்பியோடிய தொழிலாளர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற 5-க்கும் மேற்பட்ட தொழி லாளர்களும் கண்டக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த தாக்குதலில் காயமடைந்த அங்கமுத்துவை பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கண்டக்டர் அங்கமுத்து போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரணேஷ்வரன் தவிர மற்ற 7 பேரை தேடி வருகின்றனர். பிரணேஷ்வரன் கண்டக்டர் தன்னை தாக்கியதாக கூறி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

    சமீபகாலமாக தொடர்ந்து அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அரசு கவனம் எடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×