search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    மணிமுத்தாறு பகுதியில் கனமழை- நிலச்சரிவு ஏற்பட்டு பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    மணிமுத்தாறு பகுதியில் பலத்த மழை பெய்ததால் மாஞ்சோலை செல்லும் சாலையில் நேற்று மாலை திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சச பாறைகள் ரோட்டில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்று மாலை மணிமுத்தாறு பகுதியில் கனமழை கொட்டியது. பாபநாசம், சேர்வலாறு, நாங்குநேரி, கொடுமுடியாறு, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ஆகிய பகுதிகளிலும் நன்றாக மழை பெய்தது.

    நெல்லை, பாளை, சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, சங்கரன்கோவில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, காயல்பட்டினம், விளாத்திகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    மணிமுத்தாறு பகுதியில் பலத்த மழை பெய்ததால் மாஞ்சோலை செல்லும் சாலையில் நேற்று மாலை திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சச பாறைகள் ரோட்டில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாறைகளையும், மண்சரிவையும் அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து இரவு போக்குவரத்து சீரானது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,497 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 905 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 134.45 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 139.79 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 830 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 260 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.15 அடியாக உள்ளது.

    கொடுமுடியாறு அணைக்கும் பலத்த மழை காரணமாக அதிக அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் நேற்று 46.50 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று 48 அடியானது. இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    Next Story
    ×