search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    தடுப்பூசி (கோப்புப்படம்)

    சிறுவர்களுக்கு தடுப்பூசி முன்பதிவு தொடங்கியது- பள்ளிகளிலும் பட்டியல் தயாரிக்க உத்தரவு

    தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குபட்டவர்கள் பிரிவில் உள்ள 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
    சென்னை:

    தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் கொரோனா வைரசும் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கொரோனாவும், ஒமைக்ரானும் போட்டி போட்டு அதிகரித்து வருகின்றன.

    இந்தியாவில் தற்போது ஒமைக்ரான், கொரோனா இரு வைரசுகளும் சமூக பரவலாக மாறி விட்டது. இதனால் இந்தியாவில் 3-வது அலை உருவாகி இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். அடுத்த மாதம் இது உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது.

    ஒமைக்ரான் வைரஸ் எந்தவித அறிகுறியும் இல்லாமல் பரவுகிறது. இது மருத்துவ துறையினர் மற்றும் அரசு வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா, ஒமைக்ரான் வைரசுகளை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது ஒன்றே சிறந்த வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசியை 90.1 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர்.

    64.4 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலும் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இமாச்சலபிரதேசத்தில் இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 99.6 சதவீதத்தை நெருங்கி உள்ளது. காஷ்மீர், மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நிறைய பேர் இருதவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

    பஞ்சாப், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதுபோல 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் நாளை மறுநாள் (3-ந்தேதி) முதல் சிறுவர் - சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 25-ந்தேதி அறிவித்தார். சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு வருகிற 10-ந்தேதி முதல் பூஸ்டர்
    தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மோடி கூறியுள்ளார்.

    இதை கருத்தில் கொண்டு மேலும் 2 தடுப்பூசிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் இந்தியாவில் செலுத்தப்படும் தடுப்பூசி வகைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடி ஆகும். தமிழகத்தில் 33 லட்சம் பேர் இந்த பிரிவில் உள்ளனர். இவர்கள் இன்று முதல் தங்களது பெயரை கோவின் இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் கோவின் இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்தனர். இந்த பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆதார், பாஸ்போர்ட், குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் பயன்படுத்தி முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குபட்டவர்கள் பிரிவில் உள்ள 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அன்று முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

    பொது இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்பதால் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தலால் நேரடி வகுப்புகள் தொடங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    என்றாலும் பள்ளிகள் மூலம் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை பட்டியலாக தயாரித்து தரும் படி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    அந்த மாணவர்களை அழைத்து தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் பணி விரைவில் 100 சதவீதத்தை எட்டும் வாய்ப்பு உள்ளது.


    Next Story
    ×