search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    7 கோவில்களில் மருத்துவ மையங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்பட 7 கோவில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர்-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை-அருணாச்சலேசுவரர் கோயில், மேல்மலையனூர்-அங்காள பரமேஸ்வரி கோயில், சோளிங்கர்- லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை-சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி-சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி- தண்டாயுதபாணி சுவாமி கோயில் (மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம்) ஆகிய 7 கோயில்களில் மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதல் உதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22-ம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுகளுடன் கூடிய மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, கோயில் மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக, திருச்செந்தூர்-சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை-அருணாச்சலேசுவரர் கோயில், மேல்மலையனூர்-அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை-சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி-சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மற்றும் பழனி- தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்த மாணி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும்.

    இப்பணிக்காக ஓர் மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 லட்சம், வீதம் 10 கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.

    அதேசமயத்தில் காணொலி காட்சி மூலம் அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், காந்தி, சா.மு. நாசர், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ். திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், விழுப்புரம் கலெக்டர் டி. மோகன், ராணிப்பேட்டை கலெக்டர் தெ. பாஸ்கரபாண்டியன், கோயம்புத்தூர் கலெக்டர் சமீரன், திருவள்ளூர் கலெக்டர் மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், திண்டுக்கல் கலெக்டர் முனைவர் ச.விசாகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



    Next Story
    ×