
மதுரை புது எல்லீஸ் நகர் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் நாகவேல். பெயிண்டரான இவருக்கும், அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யங்கோட்டை சேர்ந்த வெள்ளைச்சாமி-வள்ளி ஆகியோரின் மகள் சுதாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான சில நாட்களிலேயே சுதா தனிக்குடித்தனத்துக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் நாகவேல் தனது தாய் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து வசிப்போம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு நாகவேல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சுதா தனிக்குடித்தனம் பற்றி மீண்டும் பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நாகவேல் சுதாவின் கழுத்தை பிடித்து இறுக்கி நெருக்கி உள்ளார். இதில் மூச்சுத்திணறி சுதா சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆத்திரத்தில் கொலை செய்ததை உணர்ந்த நாகவேல் உடனே போலீஸ் நிலையத்தில் சரண் அடைய முடிவு செய்தார். அதன்படி நாகவேல் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்துக்கு நள்ளிரவில் சென்று மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதனிடம் சரணடைந்தார்.
கொலை குறித்து தகவல் அறிந்த மாநகர் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக சரண் அடைந்த நாகவேல் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
குடும்பத்தில் மூத்தவன் என்பதால் அனைத்து பொறுப்புகளும் இருந்தது. இதனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தேன். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனக்கும், சுதாவுக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகுதான் சுதாவுக்கு என்னை விட 2 வயது அதிகம் என்ற விவரம் எனக்கு தெரிய வந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இதற்கிடையே திருமணமான நாளில் இருந்து சுதா தனிக்குடித்தனம் வருமாறு என்னை அடிக்கடி நச்சரித்து வந்தார். ஆனால் நான் மறுத்து விட்டேன். இந்தநிலையில் சுதா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்தார். இது எனக்கு தெரிய வந்தது. எனவே நான் அவரை கண்டித்தேன். இருந்த போதிலும் அவர் என் பேச்சை கேட்கவில்லை.
இந்தநிலையில் சுதா என்னை தனிகுடித்தனம் வரும்படி தொடர்ந்து தொல்லை தந்தார். இதனால் அவரது நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. நேற்று இரவு வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பினேன்.
அப்போது நள்ளிரவு 11 மணியளவில் சுதா மீண்டும் தனிக்குடித்தனம் செல்லும் விஷயத்தை நினைவு படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்தேன். ஆனால் அவர் இறந்து போவார் என்று நினைக்கவில்லை.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.