search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

    ரேசன் கடைகளுக்கு வினியோகிக்க கரும்பை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்

    பூலாம்பட்டி பஸ் நிலையம் முன், திரண்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்தும், கையில் கரும்புகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

    சமீபத்தில் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகையில் வழங்கப்பட உள்ள கரும்பு ஒன்று அதிக பட்சமாக ரூ.33 வரை விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவுத்துறையினர் நேரடியாக கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    இதனையடுத்து காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பினை வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யாமல், கூட்டுறவு துறையினர் கொள்முதல் செய்வார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் காவிரி பாசனப் பகுதியில் கூட்டுறவுத்துறை சார்ந்த அலுவலர்கள் யாரும் இதுவரை கரும்பு கொள்முதல் செய்யாத நிலையில் விவசாயிகள் கரும்பு அறுவடை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து இன்று பூலாம்பட்டி பஸ் நிலையம் முன், திரண்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்தும், கையில் கரும்புகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், அறுவடைக்கு தயாராக உள்ள எங்களது செங்கரும்புகளை கூட்டுறவு துறையினர் கொள்முதல் செய்யாத நிலையில் அதனை எதிர்பார்த்துக் காத்திருந்த எங்களுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக இப்பகுதியில் உள்ள அனைத்து கரும்பு தோட்டங்களில் உள்ள கரும்பினை உடனடியாக மொத்த கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர். அவர்களிடம் பூலாம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×