search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை இல்லை
    X
    புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை இல்லை

    புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை இல்லை

    காலம் காலமாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு எந்தெந்த கோவில்களில் வழிபாடுகள் நடைபெறுமோ அங்கெல்லாம் வழிபாடுகள் நடத்த தடையில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் கூட்டம் கூடக்கூடாது. தேவை இல்லாமல் வெளியே சுற்றக் கூடாது. நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது. அனைவரும் குடும்பத்துடன் வீடுகளில் இருந்தே புத்தாண்டை கொண்டாடுங்கள் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

    வழக்கமாக புத்தாண்டு தினத்தில் கொண்டாட்டத்துக்கு ஒரு கூட்டம் திரண்டாலும், இன்னொரு பக்கம் கோவில்கள், தேவாலயங்களில் சென்று நள்ளிரவில் வழிபாடு நடத்துவதிலும் பக்தர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

    இந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்களுக்கு செல்ல முடியுமா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

    காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், ஏகாம் பரநாதர் கோவில் ஆகிய கோவில்களை ஆய்வு செய்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் சேகர்பாபு

    காலம் காலமாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு எந்தெந்த கோவில்களில் வழிபாடுகள் நடைபெறுமோ அங்கெல்லாம் வழிபாடுகள் நடத்த தடையில்லை. பக்தர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம். தி.மு.க. அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல.

    அதேநேரம் தற்போதைய பெருந்தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டு கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். இடைவெளியை கடைபிடித்து வழிபாடு செய்ய செல்ல வேண்டும்.

    சாமி தரிசனம் செய்யலாம். அர்ச்சனைகளை தவிர்க்க வேண்டும். ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தேர் ஓடும் பாதை இருந்தால் நிச்சயமாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று தங்கத்தேருக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    கோவில் நகரான காஞ்சீபுரத்துக்கு பல இடங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். அதேபோல் திருமண நிகழ்ச்சிகளும் பெருமளவில் நடைபெறுகிறது. எனவே ஏகாம்பர நாதர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோவிலில் திறக்கப்படாமல் இருக்கும் கிழக்கு வாசலை திறப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

    தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளுக்கு பிறகும் கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. விரைவில் எல்லா கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சருடன் எம்.எல்.ஏ.க்கள், சுந்தர், எழிலரசன், அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×