search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் காங்கயம் ரோடு பூணூல் காடு பகுதி பொதுமக்களுக்கு  இன்று ரத்த பரிசோதனை நடைபெற்ற காட்சி.
    X
    திருப்பூர் காங்கயம் ரோடு பூணூல் காடு பகுதி பொதுமக்களுக்கு இன்று ரத்த பரிசோதனை நடைபெற்ற காட்சி.

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு- 40க்கு கீழ் குறைந்தது

    நடப்பாண்டு கொரோனா இரண்டாவது அலை பரவல் தொடங்கிய மார்ச், ஏப்ரலுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 40க்கும் குறைவாகவே கொரோனா பதிவாகியது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பாதிப்பில் மாநிலத்தில் 7-வது இடத்தில் இருந்த திருப்பூர் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்துக்கு (39 பேர்) வந்துள்ளது. இம்மாத துவக்கத்தில் நாள் ஒன்றுக்கு 53 பேருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் படிப்படியாக தொற்று குறைந்து 40க்கும் கீழ் வந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    நடப்பாண்டு கொரோனா இரண்டாவது அலை பரவல் தொடங்கிய மார்ச், ஏப்ரலுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 40க்கும் குறைவாகவே கொரோனா பதிவாகியது. அந்த நிலை தற்போது வந்துள்ளது.

    இம்மாதம் தொடக்கத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 600ஐ கடந்திருந்தது. நலம் பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 50 யை கடந்து பதிவாகியதால் தற்போது 456 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 

    8 மாத இடைவெளிக்கு பின் சிசிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 98 ஆயிரம் பேருக்கு இதுவரை தொற்று பாதித்துள்ளது. 97 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

    மேலும் மாவட்டத்தில் 2.47 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. முதல் தவணை தடுப்பூசியை 93 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 60 சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி 30 லட்சத்து 64 ஆயிரத்து 981 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 லட்சத்து 87 ஆயிரத்து 513 ஆண்களும், 14 லட்சத்து 77 ஆயிரத்து 931 பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

    அதிகபட்சமாக 18 வயதை கடந்த 18.97 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். குறைந்தபட்சமாக 60 வயதை கடந்த 4.02 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட 7.64 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

    கோவேக்ஷினை 3.17 லட்சம் பேரும், கோவிஷீல்டு தடுப்பூசியை 27.43 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், காலக்கெடு முடிந்த பின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர் யார் என்பது குறித்து வீடுவீடாக விரைவில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அவர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே உடல்நிலை பரிசோதித்து தடுப்பூசி செலுத்தப்படும்.

    திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை வசம் 2.47 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு  உள்ளது.  மாவட்டத்திற்குட்பட்ட வெள்ளகோவில் நகராட்சி 3-வது வார்டு டி.ஆர்., நகர், நாச்சியப்பகவுண்டன் வலசில் வீடு வீடாக சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சி கமிஷனர் மோகன்குமார் மற்றும் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். இதில் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் சளி, டெங்கு காய்ச்சல் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பொருட்டு வெள்ளகோவில் அரசு சமுதாய சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கதிரவன் உட்பட சுகாதாரப்பணியாளர்கள் கலந்து கொண்டு தண்ணீர் தேங்கிய இடம் மற்றும் தண்ணீர் பிடித்து வைத்துள்ள பாத்திரங்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்க வேண்டுமென கூறினர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    Next Story
    ×