என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
ஊராட்சிகளில் அடிப்படை வசதி - கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்
ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக கிராமங்கள் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் ‘தாய்’ எனப்படும் கிராம கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டில் இருந்தது.
தற்போது அண்ணா மறுமலர்ச்சி திட்டம் எனும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து திட்ட செயல்பாட்டுக்கான பணிகள் தொடங்கியுள்ளது. அவ்வகையில் குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளில் அனிக்கடவு, வாகத்தொழுவு, குடிமங்கலம் ஆகிய ஊராட்சிகள் திட்ட செயலாக்கத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் திட்ட கிராமத்திலுள்ள வளங்கள், தேவையான கட்டமைப்பு வசதிகள், தற்போதுள்ள சாலைகளின் நிலை உட்பட அனைத்து விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில்:
அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 3 ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களின் தேவைகள் உட்பட விபரங்கள் சேகரிக்கும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
இந்த விபரங்களையும் தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து கருத்துருவும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என்றனர்.
Next Story