என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நீட் தேர்வு
  X
  நீட் தேர்வு

  நீட் தேர்வு விலக்கு மசோதா- தமிழக கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளதாக கவர்னர் மாளிகை பதில் அளித்துள்ளது.
  சென்னை:

  மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

  நீட் தேர்வால் ஏழை, எளிய, கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது என்றும், இதைக் கருத்தில் கொண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. தெரிவித்து இருந்தது.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  அதன்படி தேர்தலில் வெற்றிபெற்றதும் முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலின் கடந்த (2021) செப்டம்பர் 13-ந்தேதி நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

  பின்னர் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகுதான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.

  இந்த நிலையில் நீட் தேர்வு மசோதா கவர்னர் மாளிகையிலேயே கிடப்பில் கிடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்திவிட்டு வந்தார். ஆனாலும் இதுவரை கவர்னர் மாளிகையில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

  இந்த தீர்மானத்தை தமிழக கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது குறித்தும், தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் அளிக்கக் கோரியும் கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளன்று தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அமளியிலும் ஈடுபட்டனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகை அலுவலகம் சென்று ஜனாதிபதியின் செயலாளரிடம் நேற்று மனு கொடுத்துவிட்டு வந்தனர்.

  இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்.

  இதற்கிடையே நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பிரின்ஸ் கஜேந்திர பாபு என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டிருந்தார். இதற்கு கவர்னர் மாளிகை பதில் அளித்துள்ளது.

  “நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த பல மாதங்களாக கவர்னர் மாளிகையில் இருந்து நீட் தேர்வு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இப்போதுதான் முதல் முறையாக இந்த மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எனவே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? அல்லது ஏதாவது விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்புவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.


  Next Story
  ×