search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. 3645 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 3409 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டித்தீர்த்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பின.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் ஏரியில் இருந்து உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தற்போது மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு உபரிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தற்போது 77 நாட்களுக்கு பிறகு பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை முதல் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டு உள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. தற்போது 34.99 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இதில் 3213 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

    ஏரிக்கு 265 கனஅடி நீர் வருகிறது. சென்னையின் குடிநீருக்காக இணைப்புக் கால்வாய் வழியாக 424 கன அடி நீரும், பேபி கால்வாய் வழியாக 14 கன அடி நீரும் என மொத்தம் 473 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. 3300 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியில் 3174 மி.கன அடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த உயரம் 18.86 அடி ஏரியில் 1081 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியில் 881 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. 3645 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 3409 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 271 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன.அடி முழுவதும் நிரம்பி உள்ளது.

    சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் அடுத்த ஆண்டு முழுவதும் தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் விநியோகிக்க முடியும்.

    Next Story
    ×