என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
காப்பீடு திட்டம் - மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை
உயிரிழப்பு ஏற்பட்ட பிறகும் மின் வாரியம் அவற்றை தடுக்க உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில்லை.
திருப்பூர்:
மின் வாரியத்தில் பணியாளர் மற்றும் அலுவலருக்கு பணி உயர்வு கிடைக்கும் போது காலியாகும் இடம் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த வகையில் தமிழகத்தில் 36 ஆயிரம் பணியிடம் காலியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
அலுவலக பணியை செய்யும் அலுவலர், அதிகாரிகள் நீங்கலாக களப்பணியாற்றும் பணியாளர் இல்லை. இதனால் பெரும்பாலான பணிகள் ஒப்பந்த தொழிலாளரை நம்பியே நடந்து கொண்டிருக்கிறது. யாராக இருந்தாலும் உயரமான மின்கம்பங்களில் ஏறி வேலை பார்க்கும் போது ஆபத்து உள்ளது.
அதற்காக மின்வாரியம் சார்பில் கையுறைகள், ‘எர்த்ராடு’, இடுப்பு கயிறு, ‘ஸ்டெப் குச்சி’கள் வழங்கப்பட வேண்டும். இருப்பினும் போதிய அளவு வழங்குவதில்லை. ஒப்பந்த பணியாளர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கம்பத்தில் ஏறி வேலை பார்ப்பதும், கீழே விழுந்து படுகாயமடைவதும் சிலர் பரிதாபமாக உயிரிழப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது.
உயிரிழப்பு ஏற்பட்ட பிறகும் மின் வாரியம் அவற்றை தடுக்க உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில்லை. குறிப்பாக ஆபத்தான மின் பணியாளருக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.
திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு பகுதியில் உயரமான மின்கம்பங்களில் ஒப்பந்த பணியாளர் பணியாற்றிக் கொண்டிருந்தார். கைகளில் பாதுகாப்பு கையுறை இல்லாமல் இடுப்பு கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபரணங்கள் எதுவும் இல்லாமல் மின்கம்பத்தில் ஏறி நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
பாதுகாப்பாற்ற முறையில் பணியாற்றுவதை அவ்வழியாக சென்றுவந்த மக்கள் பரிதாபத்துடன் பார்த்து சென்றனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஒப்பந்த மின் தொழிலாளர்கள் கூறுகையில்:
மின் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த பணியாளருக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. தேவையான உபகரணம் இல்லாமல் கம்பத்தில் ஏறுவதால் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.
தொழிலாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்படும் ஒப்பந்த பணியாளர் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.
Next Story