search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி அணை
    X
    அமராவதி அணை

    நெல் அறுவடை பணியால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தள்ளிவைப்பு

    அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயைஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    உடுமலை:

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக்கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயைஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையும் அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் அணைக்கு கைகொடுத்து உதவியது. அத்துடன் அவ்வப்போது சீரான இடைவெளியில் மழைபொழிவும் ஏற்பட்டு வந்ததால் அமராவதி அணை கடந்த 5 மாதங்களாக அதன் முழு கொள்ளளவை நெருங்கியபடி உள்ளது.

    இதையடுத்து 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதன்பேரில் ராமகுளம் - கல்லாபுரம் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதில் வருகிற 24.4.2022 வரை 120 நாட்களில் (65 நாட்கள் தண்ணீர் திறப்பு 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு) உரிய இடைவெளிவிட்டு அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பைப்பொறுத்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த சூழலில் கல்லாபுரம் அமராவதி பகுதியில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பை தள்ளிவைக்க கோரி அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தண்ணீர் திறப்பு ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×