search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    மின் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

    தேர்தல் அறிக்கையில் இல்லாத ஒன்றை ஜி.எஸ்.டி. வரி குழுமம் சொல்கிறது என்கிற காரணத்தை காட்டி, தி.மு.க. அரசு மக்கள் மீது கூடுதல் சுமையை திணிப்பது ஏற்கத்தக்கதல்ல என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது வைத்துவிட்டு, தற்போது முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வசூலிக்காத இனங்களுக்கு எல்லாம் வரி வசூலிக்க உத்தரவிட்டு வருவது தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டிற்கு மற்றுமொரு உதாரணம்.

    தற்போது மின் பயன்பாடு கட்டணம் தவிர பிற கட்டணங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மின்வாரிய சேவைகளுக்கு இதுவரை ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படவில்லை. இந்தநிலையில் தி.மு.க. ஆட்சியில் இதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுவதாகவும், 2017-ம்ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்ததில் இருந்து இதுநாள் வரை வசூலிக்கப்படாதவர்களிடம் இருந்தும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்த செய்தியை கேட்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு குறைந்தாலும், ஒமைக்ரான் தொற்று நோய்த்தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை கண்டு பயமுற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு இரட்டிப்பு அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தலைப்பு செய்தியாக ‘மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்' என்று தெரிவித்ததோடு, கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 2 மாதத்திற்கு 200 யூனிட் என்பது 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தது.

    இந்தநிலையில் தேர்தல் அறிக்கையில் இல்லாத ஒன்றை ஜி.எஸ்.டி. வரி குழுமம் சொல்கிறது என்கிற காரணத்தை காட்டி, தி.மு.க. அரசு மக்கள் மீது கூடுதல் சுமையை திணிப்பது ஏற்கத்தக்கதல்ல. தி.மு.க.வின் இந்த மக்கள் விரோத அறிவிப்புக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    முக ஸ்டாலின்

    எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையில் மவுனமாக இருக்காமல் உடனடியாக தலையிட்டு மின் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், இதனை நிரந்தரமாக ரத்து செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×