search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒமைக்ரான் வைரஸ்
    X
    ஒமைக்ரான் வைரஸ்

    இன்று இரவு தமிழகம் வரும் மத்திய நிபுணர் குழு- 5 நாட்கள் தங்கி இருந்து கண்காணிப்பு

    தமிழ்நாட்டுக்கு வரும் குழுவில் மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் டாக்டர் வினிதா, டாக்டர் புர்பசா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
    சென்னை:

    தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

    கர்நாடகாவில் கடந்த 2-ந்தேதி ஒமைக்ரான் பாதிப்பு தெரியவந்தது. அதன்பிறகு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்பட 17 மாநிலங்களில் பரவியது.

    இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 110 பேரும், டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும், தமிழ்நாட்டில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் பாதிக்கப்பட்டனர்.

    இது தவிர அரியானா, ஆந்திரா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், சண்டிகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் 422-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேரில் தற்போது வரை 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். மொத்தம் 22 பேர் சென்னை உள்ளிட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். இன்னும் 42 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.

    பிரதமர் மோடி


    இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார்.

    அப்போது ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக கூறினார். அதன்படி தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு வருகிறது.

    தமிழ்நாட்டுக்கு வரும் குழுவில் மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் டாக்டர் வினிதா, டாக்டர் புர்பசா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் இன்று இரவு சென்னை வருவார்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளனர். தமிழ்நாட்டில் 5 நாட்கள் வரை தங்கி இருந்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஒமைக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வார்கள்.

    ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எங்கெங்கு உள்ளனர். அவர்களுக்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், வெண்டிலேட்டர் வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


    Next Story
    ×