search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமூர்த்திஅணை
    X
    திருமூர்த்திஅணை

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு - 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

    திருமூர்த்தி அணையில் இருந்து 2, 4-ம் மண்டல பாசன நிலங்களுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் நீர் திறக்கப்படும்.
    உடுமலை:

    பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி., ) பாசனத் திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. 

    அதன் அடிப்படையில் நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த ஆகஸ்டு3-ந் தண்ணீர் திறக்கப்பட்டது.

    நடப்பாண்டு தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகள் இயல்பை விட அதிகரித்ததால் திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பிய நிலையில் காணப்பட்டது. இதனால் 4-ம் மண்டல பாசன காலமான 135 நாட்களில் பெரும்பாலும் இடைவெளியில்லாமல் நீர் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் (23-ந்தேதி) நிறைவு செய்யப்பட்டது.

    திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு திருப்தியாக உள்ளதால் முதல் மண்டல பாசனத்திற்கு  நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் பாசன சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் நீர் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் முதல் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.
     
    இம்மண்டல பாசன காலத்தில் சுற்றுக்கு 1,900 மில்லியன் கன அடி வீதம் 5 சுற்றுக்களில் 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்க முடிவு செய்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசும் தண்ணீர் திறக்க அனுமதி அளித்தது.

    இதையடுத்து நாளை 26-ந்தேதி(ஞாயிற்று கிழமை) மாலை 5.30 மணிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கின்றனர். 

    இதன் மூலம் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி தாலுகாவில் 12,567 ஏக்கர் நிலங்களும், சூலூர் தாலுகாவில் 4,033 ஏக்கர், திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவில் 27,446 ஏக்கர், மடத்துக்குளம் தாலுகாவில் 7,492 ஏக்கர், தாராபுரம் 8,395, பல்லடம்  7,887, திருப்பூர் தாலுகா 11,309 ஏக்கர், காங்கயம் 15,392 ஏக்கர் நிலங்கள் என 94 ஆயிரத்து 521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தண்ணீர் திறப்பை முன்னிட்டு பிரதான கால்வாய் மற்றும் கிளைக் கால்வாய்களில் முதல் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் மடைகள் மாற்றி அமைத்தல், கால்வாய் பராமரிப்பு பணி என தண்ணீர் திறப்பதற்கான ஆயத்த பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள 60 அடியில் 57.08 அடி நீர் மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 94 கன அடி நீர் வரத்து உள்ளது. 27 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து 2, 4-ம் மண்டல பாசன நிலங்களுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் நீர் திறக்கப்படும். 

    24 ஆண்டுக்கு பின் நடப்பாண்டு ஆகஸ்டு 3-ந்தேதி திறக்கப்பட்டது. அதே போல் முதல் மற்றும் 3ம் மண்டல பாசனத்திற்கு ஜனவரி இறுதியில் நீர் திறக்கப்படும். நடப்பாண்டு டிசம்பர் மாதம் திறக்கப்படுகிறது.

    நடப்பாண்டு பருவ மழைகள் திருப்தியாக பெய்ததால் முன்னதாகவே பாசனம் துவங்கும் நிலையில், பாசனத்திற்கு கூடுதல் நீர் வழங்கியதோடு உப்பாறு அணை, வட்ட மலைக்கரை ஓடை அணை, கோதவாடி குளம் என வழி யோரத்திலுள்ள ஏராளமான குளம், குட்டைகளுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×