search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    நளினிக்கு ஒரு மாதம் பரோல்- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளி விட கோரி சென்னை ஐகோர்ட்டில் அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது என்று அமைச்சரவையில் முடிவு செய்து, ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் என்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், என்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்.

    இதுகுறித்து கடந்த மே மாதம் மற்றும் ஆகஸ்டு மாதம் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. எனவே, நளினிக்கு பரோல் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழக அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘‘பத்மாவின் மனுவை அரசு பரிசீலித்து நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது’’ என்று கூறினார். இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


    Next Story
    ×