search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப் பெரியாறு அணை குறித்து மீண்டும் சர்ச்சை கருத்து - கேரளாவுக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்

    முல்லைப்பெரியாறு அணை குறித்து மீண்டும் சர்ச்சை கருத்து தெரிவித்த கேரள நீர்வளத்துறைக்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    கூடலூர்:

    தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயத்தின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. மேலும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை கர்ணல் ஜான் பென்னி குவிக் முயற்சியால் முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தமிழக பகுதிக்கு திருப்பப்பட்டது.

    அணை கட்டி 125 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் பலமிழந்ததாக கேரளா குற்றம் சாட்டியது. இது குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என அறிவுறுத்தியது.

    ஆனால் கேரளாவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து வதந்தி பரப்புகின்றனர். முல்லைப்பெரியாறு அணை பலமிழந்து விட்டதாகவும் அதனை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் எனவும் சில பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது.

    வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய போதும் அணை பகுதிக்கு சென்ற கேரள அமைச்சர்கள் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டனர்.

    இது தமிழக விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இயற்கையின் கருணையால் அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. ஆனால் கேரளா தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறது. இங்கு ஆய்வுக்கு சென்ற கேரள நீர் வளத்துறை அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டதால் பேபி அணையின் கீழ் பகுதியில் கசிவு நீர் அதிகரித்துள்ளதாகவும், மழை குறைந்த நிலையில் நீர் கசிவு வெளியேறுவது தெரிய வந்துள்ளதாகவும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

    இது குறித்து 5 மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 44 ஆண்டுகளாக கேரள அரசு பேபி அணை குறித்து வதந்தி பரப்புகிறது. தற்போது கேரள அதிகாரிகள் புது புரளியை கிளப்பியுள்ளனர். கம்பீரமாக நிற்கும் பேபி அணையில் கசிவு ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

    பிரதான அணையில் இருக்க கூடிய முழு பலமும் பேபி அணையில் உள்ளது. ஆனால் கேரள நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் தேவையில்லாமல் பீதியை கிளப்பும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை நிலை நிறுத்தி அணையின் பலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கேரள நீர் வளத்துறை அதிகாரிகள் பெரியாறு அணையில் இருந்து வெளியேற வேண்டும் என ஆவேசத்துடன் கூறினர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம 141.90 அடியாக உள்ளது. வரத்து 614 கன அடி. திறப்பு 600 கன அடி. இருப்பு 7639 மி.கன அடி. வைகை அணையின் நீர் மட்டடம் 70.08 அடி. வரத்து 692 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 5846 மி.கன அடி.
    Next Story
    ×