search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜேந்திர பாலாஜி
    X
    ராஜேந்திர பாலாஜி

    ராஜேந்திர பாலாஜியை பிடிக்க கொடைக்கானலில் தேடுதல் வேட்டை

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடைக்கானலில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
    மதுரை:

    முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ. 3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த தனிப்படையினர் ராஜேந்திரபாலாஜி பயன்படுத்திய செல்போன்கள் சிக்னல் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதை அறிய முயன்றனர். ஆனால் அந்த செல்போன்கள் தற்போது சுவிட்ச் அப் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் போலீசார் தேடுவதை அறிந்த ராஜேந்திரபாலாஜி கார்களில் மாறி மாறி பல்வேறு இடங்களுக்கு செல்வதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. ராஜேந்திரபாலாஜியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களது செல்போன் அழைப்புகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதில் ராஜேந்திரபாலாஜி மதுரை, நத்தம், திருப்பதி பகுதிகளில் இருக்கலாம் என தனிப்படை போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் அங்கு தனிப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் திருப்பதியில் ராஜேந்திர பாலாஜி இல்லை என தெரியவந்தது. எனவே அங்கு சென்ற தனிப்படையினர் திரும்பி வந்து விட்டனர்.

    மதுரையில் முன்னாள் அமைச்சரின் தோட்டம், மானாமதுரையில் உள்ள உறவினர் வீடு உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படையினர் ரகசியமாக விசாரித்துள்ளனர். ஆனால் அங்கும் அவர் இல்லை. இந்த நிலையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ள காவல் துறை கூடுதலாக 2 தனிப்படைகளை அமைத்துள்ளது.

    ராஜேந்திரபாலாஜி கடைசியாக யாரிடம் எல்லாம் பேசினார் என்று ஆய்வு செய்தபோது முன்னாள் அமைச்சர் ஒருவரிடமும், மற்றொரு முன்னாள் பெண் அமைச்சரின் உறவினரான காவல்துறை அதிகாரியிடமும் பேசி இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் என்ன பேசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் ராஜேந்திரபாலாஜி கொடைக்கானலில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது நெருங்கிய நண்பர் கொடைக்கானலில் இருப்பதாகவும், இங்கு அவர் அடிக்கடி வந்து தங்குவார் என்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையில் தனிப்படையினர் கொடைக்கானலில் முகாமிட்டு சோதனை நடத்தினர். ஆனால் குறிப்பிட்ட பங்களாவில் ராஜேந்திரபாலாஜி இல்லை. அவர் விடுதிகளில் தங்கி இருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொடைக்கானலில் உள்ள அனைத்து விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் இதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ராஜேந்திரபாலாஜி கேரளாவுக்கு தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இதற்கிடையில் சமுதாய ரீதியாக அவருக்கு கோவையில் ஏராளமானோருடன் தொடர்பு இருப்பதும், அவர்களது இடங்களில் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர். இதனால் ஒரு தனிப்படையினர் கோவை விரைந்துள்ளனர். அவர்கள் அங்கு ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் பெங்களூரு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×