search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    சசிகலாவுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் ஓபிஎஸ்- மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி

    ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவை ஆதரிப்பது போல தொடர்ந்து கருத்துக்களை கூறுவது ஏன்? என்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

    சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘‘அதுபற்றி கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்’’ என்று அவர் கூறி இருந்தார். இதற்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்தநிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சசிகலாவை ஆதரிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    ‘‘நல்லவர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு’’ என்று அவர் பேசிய பேச்சுக்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவை ஆதரிப்பது போல தொடர்ந்து கருத்துக்களை கூறுவது ஏன்? என்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக உடனடியாக கருத்து தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கும் கருத்து சசிகலாவுக்கு பொருந்தாது’’ என்று கூறினார்.

    சசிகலாவுக்கு எப்போதும் மன்னிப்பே கிடையாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின், சசிகலா தொடர் ஆதரவு நிலைப்பாட்டுக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக பெயர் கூற விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சசிகலா


    ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். ஆனால் அவரது பேச்சுக்கள் ஒருங்கிணைப்பது போல் இல்லை. கட்சிக்குள் தனி கோஷ்டி போல செயல்படுகிறார்.

    இதற்கு முன்பு டி.டி.வி. தினகரனை சந்தித்து பேசினார். அப்போதும் சர்ச்சை எழுந்தது. திடீரென கருணாநிதியை புகழ்ந்து பேசுகிறார். தி.மு.க. முன்னணி நிர்வாகியான துரைமுருகனையும் புகழ்கிறார்.

    என்ன முடிவோடு இப்படி அவர் பேசுகிறார் என்பது புரியவில்லை. தேவையில்லாமல் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் உள்ளன.

    தி.மு.க.வில் இருந்து வைகோ பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார். தி.மு.க.வில் இருந்து யாராவது இப்படி பேசியது உண்டா?

    ஓ.பி.எஸ். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று பாடுபடுவது போல் தெரியவில்லை. அம்மா உயிரோடு இருந்து இருந்தால் இவரால் இப்படி பேச முடியுமா? கட்சிக்கு தலைவர்கள் தேனாக இனிக்க வேண்டும். அதற்கு பதிலாக உள்ளுக்குள் இருந்து கொண்டே தேளாக கொட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் கட்சியின் முன்னணி நிர்வாகியுமான இன்னொருவரும் பெயர் குறிப்பிட வேண்டாம் என தெரிவித்துக் கொண்டு காரசாரமாக கருத்துக்களை தெரிவித்தார்.

    நாங்கள் எதையாவது வெளிப்படையாக பேசினால் அது கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி விடக்கூடாது. இதன் காரணமாகவே பெயரை குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துக் கொள்கிறேன்.

    கட்சிக்குள் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இரட்டைத்தலைமையை தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கீகரித்துள்ளனர்.

    எனவே கட்சிக்குள் பிரச்சினை ஏற்படுவது போன்ற கருத்துக்களை தலைமையில் இருப்பவர்கள் தெரிவிக்கக் கூடாது. இதனை கட்சியின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அமர்ந்து பேசி சரி செய்து கொள்ள வேண்டும்.

    இதுபோன்ற சர்ச்சைக்குள்ளான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்திடம் 2-ம் கட்ட தலைவர்கள் தெரிவிப்பது மரியாதையாக இருக்காது. எனவே அதுபற்றி இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் உரிய முறையில் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.


    Next Story
    ×