search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் குளிர்-பனிப்பொழிவு அதிகமாக இருக்க வாய்ப்பு

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் குளிர் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25-ந்தேதி தொடங்கியது. நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ஆண்டு இயல்பான அளவை விட மழை பெய்துள்ளது.

    ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை சற்று குறைவாக பெய்துள்ளது.

    டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே மழை படிப்படியாக குறையத் தொடங்கியதோடு வானம் மேக மூட்டமாகவும், தெளிவாகவும் காணப்படுகிறது.

    இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த வாரம் முதல் குளிர் காற்று வீசத் தொடங்கி உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனேக பகுதிகளில் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    அதிகாலையிலும் குளிர்ச்சி நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் குளிர் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    குளிர் காலத்தில் உள்ள பருவநிலை தற்போது நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் குளிர் மற்றும் பனிப்பொழிவு 23-ந்தேதி வரை காணப்படும்.

    அதன் பிறகு மெதுவாக வெப்பம் அதிகரிக்க தொடங்கும். 24, 25-ந் தேதிகளில் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்.

    தற்போது இயல்பு நிலையை விட வெப்பம் குறைவாக இருப்பதால் குளிர் காணப்படுகிறது. இது இந்த மாதத்தில் காணப்படும் வழக்கமான நிலைதான். வடகிழக்கு காற்று வீசுவதால் குளிர்ச்சி காணப்படுகிறது.

    சென்னையில் வெப்பநிலை 20 செல்சியஸ் வரை தற்போது உள்ளது. அடுத்து வரும் நாட்களில் இது இயல்பு நிலைக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×