search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 2-வது வாரம் தேர்தல் நடத்த ஏற்பாடு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றன.
    சென்னை:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.

    அதில் ஆளும் தி.மு.க. அதிக இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளை கொண்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. மேலும் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, பொது வார்டு, எஸ்.சி., எஸ்.டி., வார்டுகளும் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் கடந்த 9-ந்தேதி வார்டு வாரியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர் எந்த வார்டு, எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்து உள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில், இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சமீபத்தில் சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டன. அப்படி தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்படவில்லை.

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளுக்கு மட்டுமே வாக்காளர் பட்டியல் வெளியானது. தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு பிரிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

    இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் தாம்பரம் மாநகராட்சிக்கு வரையறுக்கப்பட்டு உள்ள 70 வார்டுகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு அங்கு வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

    திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மாங்காடு, நந்திவரம்- கூடுவாஞ்சேரி, குன்றத்தூர், பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய நகராட்சிகளுக்கான எல்லை நிர்ணயம் நடந்து வருகிறது. அங்கும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியாக இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்


    இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை
    ஜனவரி 31-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    அடுத்த மாதம் (ஜனவரி) தேர்தல் அட்டவணை வெளியிடப்பட உள்ளது. பொங்கலுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அட்டவணை வெளியாக உள்ளது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு வரையறை செய்யப்பட்ட பகுதிகளுக்கு முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்துவது என்றும், தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2-வது கட்டமாக தேர்தல் நடத்துவது என்றும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

    ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

    பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் ஜனவரி 15-ந்தேதிக்குள் வழங்கி முடிக்கப்பட்டு விடும். அதன்பிறகு தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு 27 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படும்.

    வேட்புமனுதாக்கல், வாபஸ், பரிசீலனை, இறுதிப் பட்டியல் ஆகியவை முடிந்தபிறகு பிரசாரத்துக்கு காலஅவகாசம் அளிக்கப்படும். பிறகு ஓட்டுப்பதிவு நடக்கும்.

    அந்த வகையில் கணக்கிட்டால் பிப்ரவரி 2-வது வாரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் வகையில் ஏற்பாடு நடந்து வருவதாக தெரியவந்துள்ளது. அநேகமாக பிப்ரவரி 12-ந்தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றன.

    தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி. மு.க. உள்ளிட்ட கட்சிகளில் விருப்ப மனு வாங்கப்பட்டு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஒவ்வொரு கட்சியிலும் கடும் போட்டி நிலவும்.

    இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் மாவட்ட செயலாளர்கள் மூலம் கவுன்சிலர் ‘சீட்’ பெறுவதற்கு ‘தூது’ விட்டு வருகின்றனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் நீடிக்கின்றன. இதில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை பெற இப்போதே ஆர்வம் காட்டி வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா மட்டுமே பெரிய கட்சியாக உள்ளது. எனவே அந்த கட்சி அ.தி.மு.க.விடம் கணிசமான தொகுதிகளை எதிர்பார்க்கிறது.

    பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகள் தனித்து களம் இறங்க உள்ளன. அந்த கட்சிகளும் விருப்ப மனுக்களை பெற்று வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி உள்ளது. எனவே இன்னும் 2 வாரங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும்.


    Next Story
    ×