search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயக்குமார்
    X
    ஜெயக்குமார்

    சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை- ஜெயக்குமார் திட்டவட்டம்

    சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது என்றும், அ.தி.மு.க.வுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழா நிறைவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- ‘தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தன்மைக்கு ஏற்புடையது’ என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சசிகலாவை மனதில் வைத்து இதை சொன்னாரா?.

    பதில்:- மனித குலம் தோன்றியதில் இருந்தே தவறு செய்தல் என்பது இயல்பு. ஆனால் அந்த தவறை திருத்திக்கொண்டு வாழ்வதே மனித குலத்தின் சிறப்பு. அந்த அடிப்படையில் ஒரு பெருந்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தவறு செய்தவர்கள் என்ற வகையில் பார்க்காமல், தவறை உணர்ந்தவர்கள், இனி ஒரு நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்ற அர்த்தத்தில் வருகிறவர்களுக்கு நிச்சயம் மன்னிப்பு என்பது உண்டு. ஆனால் சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமே உறுதியாக இருக்கிறார்.

    ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை திருப்பி காட்டு’ என்றார் இயேசுபிரான். அந்தவகையில்தான் மன்னிப்பு என்பதும் ஒரு விஷயம். அ.தி.மு.க.வில் எல்லா நிர்வாகிகளும் ஒரே எண்ணத்துடன்தான் இருக்கிறார்கள். எனவே இந்த கதைக்கும், சசிகலாவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் அந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. ஏற்கனவே கட்சி கொடியையோ, பொதுச்செயலாளர் என்ற பெயரையோ பயன்படுத்தக்கூடாது என்று அவர் மீது கமிஷனர் அலுவலகத்திலேயே நான் மனு அளித்திருக்கிறேன்.

    கட்சி தலைமை அனுமதியுடன்தான் புகார் அளித்தேன்.இந்த கட்சிக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கும், எங்களுக்கும் என்ன இருக்கிறது?. எந்த சம்பந்தமும் இல்லை. மனித குலத்தின் பெருந்தன்மையை குறிப்பிடவே ஓ.பன்னீர்செல்வம் அப்படி சொன்னாரே தவிர இதில் வேறெந்த விஷயமும் கிடையாது. கட்சியில் எல்லோருக்குமே பெருந்தன்மை இருக்கிறது. எனவே அவர் கூறியது பாமர குடிமக்களுக்கு பொருந்துமே தவிர சசிகலாவுக்கு பொருந்தாது. கட்சியை கைப்பற்றும் எல்லா முயற்சியிலும் சசிகலா தோற்றுவிட்டார். நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரை நிராகரித்துள்ளனர்.

    கேள்வி:- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனரே?

    பதில்:- எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகமாகவே நடைபெறும். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த சம்பவங்கள் குறைக்கப்பட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. மத்திய அரசுடன் நாங்கள் நல்லுறவில் இருந்து மீனவர்கள் நலனுக்காக பாடுபட்டோம். எனவே மாநில அரசுதான் விழிப்பாக இருக்க வேண்டும். தி.மு.க. எம்.பி.க்கள் இந்நேரம் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டாமா? பஜ்ஜி, சுண்டல் சாப்பிட்டு உல்லாசமாக இருக்கத்தானா மக்கள் இவர்களை அனுப்பினார்கள்? மக்கள் படும் கஷ்டங்களை பிரதிபலிக்கவே இல்லையே... முதல்-அமைச்சர் கடிதம் மட்டும் எழுதினால் போதுமா?.

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் ஒரே கட்சியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே?

    பதில்:- அவர் அப்படி சொன்னாரா என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. எனவே நீங்கள் சொல்வது போல அவர் சொல்லியிருந்தால் அது தவறு. எங்கள் கட்சி விவகாரத்தில் அவர் கருத்து சொல்லக்கூடாது.

    முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் சோதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கைதான். அ.தி.மு.க.வுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்கவே முடியாது.

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×