search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் அருவி
    X
    குற்றாலம் அருவி

    குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி

    குற்றாலம் அருவிக்கு சீசன் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களும் குளுகுளு சீசன் நிலவும். அந்த காலகட்டத்தில் குற்றாலத்தில் சீசன் ரம்யமாக காணப்படும்.

    இங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளியை உருக்கியது போல் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.

    சீசன் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனால் குற்றாலம் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் களை கட்டும்.

    ஆனால், அருவிகளில் தண்ணீர் விழுந்தும் கொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்துள்ள நிலையில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டது. 
    தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது. இதனால் சீசனுக்கு செல்ல முடியாத நிலையில் தற்போது அருவிகளில் விழும் தண்ணீரில் குளித்து செல்ல சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதன் அழகை ரசித்துவிட்டு ஏக்கத்துடன் சென்று விடுகிறார்கள்.

    எனவே பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று குற்றாலம் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, டிசம்பர் 20ம் தேதி முதல் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். 

    இந்நிலையில், குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×