search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒமைக்ரான் வைரஸ்
    X
    ஒமைக்ரான் வைரஸ்

    ஒமைக்ரானில் இருந்து உருமாறும் வைரஸ் தாக்கம் அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம்- டாக்டர் எச்சரிக்கை

    ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் உயிர் ஆபத்துக்களை பெருமளவில் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிலும் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் உள்ளது.

    சென்னை:

    ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும் சதம் அடித்து சென்று கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 28 பேருக்கு ஆரம்ப கட்ட அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

    முதன் முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவிலும் அதை ஆய்வு செய்த நிபுணர்கள், ‘டெல்டாவை போல் அதிக அபத்தை ஏற்படுத்ததாது. ஆனால் வேகமாக பரவும்‘ என்றார்கள்.

    அதன்படியே ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் உயிர் ஆபத்துக்களை பெருமளவில் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிலும் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் உள்ளது.

     

    தடுப்பூசி

    இதுபற்றி பிரபல வைரஸ் ஆராய்ச்சியாளரான டாக்டர் பவித்ரா வெங்கடகோபாலன் கூறியதாவது:-

    ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தில் அறிகுறி லேசாகத்தான் இருக்கிறது. ஆனால் வேகமாக பரவுகிறது என்பதால் பிரச்சினை இல்லை. குறிப்பாக பலருக்கு அறிகுறிகளே இல்லை என்ற தகவல்கள்தான் வருகின்றன.

    அதே நேரம் ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

    கொரோனா மட்டுமல்ல ஒமைக்ரானில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி அவசியம். அடுத்து பூஸ்டர் டோசும் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் இன்னும் தடுப்பூசியே பலர் போடாமல் இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

    தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று உறுதியானாலும் பாதிப்பு குறைவாக இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    பொதுவாக வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கும். உருமாறிய பல வைரஸ்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போனதுண்டு.

    கொரோனா தாக்கத்திலும் ஆபத்தை ஏற்படுத்தாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் உருமாற்றம் அடைந்து டெல்டா வைரஸ் என்று மாறிய வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

    அந்த வகையில் உருமாற்றங்கள் எந்த மாதிரி இருக்கும்? அதன் தாக்கம் எப்படி அமையும் என்பது இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் மக்கள் கடுமையான அழிவுகளை சந்திக்க நேர்ந்தாலும் அதை சந்தித்து மீள எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பானது.

    உருமாறி கொண்டிருக்கும் வைரஸ் முந்தைய டெல்டா வைரசை போல் ஆபத்தானதாக கூட மாறலாம். எனவே மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    கொரோனாவுக்கு கடைபிடிக்கப்பட்ட அதே கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... அடுத்த 10 நாட்களில் 4 தடவை உத்தரபிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி

    Next Story
    ×