search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    விவசாயிகளுக்கு முழு மானியத்தில் இடுபொருட்கள்

    தற்போது காய்கறி பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
    மடத்துக்குளம் :

    ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்கள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. 

    இதுகுறித்து மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மடத்துக்குளம் தாலுகா பகுதியில் தக்காளி, வெங்காயம், மிளகாய், பூசணி, தர்ப்பூசணி, கத்தரி, வெண்டை, முருங்கை மற்றும் பந்தல் காய்கறிகளான பாகல், புடலை, பீர்க்கன் ஆகிய காய்கறி பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.

    காய்கறி பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்காக நடைமுறைப்படுத்தி உள்ளது. நடப்பு 2021-22-ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.6,000 மதிப்புள்ள இடுபொருட்கள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.

    தற்போது காய்கறி பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று  காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள பரப்பை அடங்கலில் குறிப்பிட்டு அதனுடன் சிட்டா, உரிமைச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 கொடுக்க வேண்டும். பயன் அடையாத விவசாயிகளுக்கு  முன்னுரிமை மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 75 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படுகிறது. 

    ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 20 ஏக்கருக்கும், இதர விவசாயிகளுக்கு 55 ஏக்கருக்கும் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள இடுபொருள் வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். 

    அல்லது உழவன் செயலியில் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் தாமோதரன் - 96598 38787, பிரபாகரன் - 75388 77132 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×