search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய போது எடுத்தபடம்.
    X
    போர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய போது எடுத்தபடம்.

    பாகிஸ்தானுடன் நடந்த போரின் வெற்றி தினம்: போர் நினைவு சின்னத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

    இந்தியா-பாக். போரின் வெற்றிதினத்தை முன்னிட்டு போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு சென்னை போர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. டிசம்பர் 3-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெற்ற இந்த போரின் 50-வது வெற்றி தினம் (விஜய் திவாஸ்) நேற்று கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின்போது போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதையொட்டி சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள போர் நினைவு சின்னம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த போர் நினைவு சின்னத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்குள்ள குறிப்பேட்டில் கையெழுத்திட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில் ‘வங்கதேசம் போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு எனது வீரவணக்கம்’ என்று எழுதினார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலாளர் டி.ஜெகந்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்த நிகழ்வின்போது தென்பிராந்திய தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அ.அருண், 1971-ம் ஆண்டு போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருடன் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்திய கடற்படையின் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் தலைமை தளபதி ரியர் அட்மிரல் புனித் சதா, கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எ.பி.படோலா உள்ளிட்டோர் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செய்தனர்.

    தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்று வீர் சக்ரா விருது பெற்ற கர்னல் கிருஷ்ணசாமி, ரியர் அட்மிரல் ராம் சாகர் உள்ளிட்ட போரில் கலந்துகொண்ட வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து தென்பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அ.அருண் போரில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து போர் நினைவு சின்னத்தில் பொதுமக்கள் மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள் ஆகியோர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களும் குடும்பமாக வந்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
    Next Story
    ×