search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    ஜெயலலிதா வீடு தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு- தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறையீடு செய்ய அனுமதி

    வேதா இல்லத்தை கையகப்படுத்தியதை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அதிமுக தரப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றி அ.தி.மு.க. ஆட்சியின் போது அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளான அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா, ஜெ. தீபக் ஆகியோர் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.சே‌ஷசாயி, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றிய அரசின் அரசாணையை ரத்து செய்து கடந்த மாதம் உத்தரவிட்டார்.

    அதில் ஏற்கனவே மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவகம் இருக்கும்போது, கூடுதலாக மற்றொரு நினைவகத்தை மக்கள் வரிப்பணத்தில் உருவாக்குவதை ஏற்க முடியாது.

    எனவே ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ. தீபக் ஆகியோரிடம் வேதா நிலையத்தின் சாவியை 4 வாரத்துக்குள் சென்னை மாவட்ட கலெக்டர் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார்.

    இதன்படி சென்னை மாவட்ட கலெக்டரிடம் ஜெ.தீபா, ஜெ. தீபக் ஆகியோர் தனித்தனியாக மனு கொடுத்து வீட்டின் சாவியை பெற்றுக்கொண்டனர்.

    இந்த நிலையில் தனி நீதிபதி என். சே‌ஷசாயி உத்தரவை எதிர்த்து, அ.தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த மேல்முறையீட்டு மனுவில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவையை தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் விதமாக அவரது வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் தனி நீதிபதி இறுதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தங்களை அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்தியாய், சக்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.


    Next Story
    ×