search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நடந்தபோது எடுத்த படம்.
    X
    பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நடந்தபோது எடுத்த படம்.

    பள்ளி, கல்லூரிகளில் அனைத்து வகுப்பு அறைகளையும் தயார்படுத்தும் பணி தொடக்கம்

    காலாண்டு, அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும் பள்ளி இறுதித் தேர்வை நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

    முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலும், அதனை தொடர்ந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 2 கட்டங்களாக பள்ளிகள் செயல்படத் தொடங்கின. கொரோனா தொற்றால் 18 மாதங்களாக ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்தவாறு கல்வி கற்று வந்த மாணவ- மாணவிகள் தற்போது உற்சாகத்துடன் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகிறார்கள்.

    பள்ளிகள் திறக்கப்பட்டபோதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்று வருகிறார்கள். இதேபோல கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.

    தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் கட்டுப்பாடுகள் முழு அளவில் தளர்வு செய்யப்பட்டுள்ளன.

    உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவும் அச்சம் ஒருபுறம் இருந்தாலும் அதனை எதிர்கொள்ள அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை தயார்படுத்தி உள்ளது. வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனாலும் மேலும் பல தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்.

    ஜனவரி 3-ந் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையை தவிர்த்து முழு அளவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளதை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள் காலை, மாலை என இரு வேளையும் தினமும் பங்கேற்கும் வகையில் வகுப்புகள் பிரிக்கப்படுகின்றன.

    இதுவரையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகளுக்கு சென்று வந்தார்கள். அநேக பள்ளிகளில் தினமும் காலையில் ஒரு பிரிவாகவும், மாலையில் ஒரு பிரிவாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டன.

    அரசு பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து வகுப்பு மாணவர்களின் தேர்வுகளும் பாதிக்கப்படாத வகையில் விரைவாக பாடங்களை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளிகள் ஜனவரி 3-ந்தேதி முதல் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.

    இதைதொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அறைகளை தயார் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதுவரையில் ஒரு பெஞ்சுக்கு 2 பேர் வீதம் அமர வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் மாணவர்கள் வழக்கம் போல 4 பேர் வீதம் அமர வைக்க திட்டமிட்டுள்ளனர்.

    சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டதால் அதிகமான பிரிவுகள் பிரிக்கப்பட்டு இருந்தன. தற்போது வகுப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு பாடப் பிரிவுகள் குறைக்கப்படுகின்றன. அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்களை பழையபடி ஒன்று சேர்த்து வகுப்புகளை பிரிக்க முடிவு செய்துள்ளன.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பு வதை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். நீண்ட காலமாக ஆன்லைன் வழியாக படித்து வந்த குழந்தைகள், மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நேரடி வகுப்புகள் நடைபெறாததால் ஆசிரியர்களுடைய கண்டிப்பு, கவனம் இல்லாமல் போனது.

    தற்போது மீண்டும் பழைய முறைப்படி வகுப்புகள் தொடங்க இருப்பதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலை, மாலை இருவேளையும் வருகிற ஜனவரி மாதம் முதல் வகுப்புகள் நடைபெற இருப்பதால் பாதி நேரம் பள்ளிகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    2 ஆண்டுகளாக மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ள நிலையில் அதனை மேம்படுத்த கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    மறந்து போன பாடப்பகுதிகள் மற்றும் கதைகள் போன்றவற்றை மீண்டும் நினைவுகூறி நடத்தி வரும் நிலையில், தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

    காலாண்டு, அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும் பள்ளி இறுதித் தேர்வை நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளுக்கும், மே மாதத்தில் கல்லூரிகளுக்கும் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×