என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
கலெக்டர் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு
திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் வாலிபர் ஒருவர் கலெக்டர் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் குமாரபட்டி கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (வயது 36) என்பவர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அதில் சுமார் 50 ஆண்டு காலமாக எங்களது நிலத்தில் வசித்து வருகிறோம். அந்த பகுதி அருகே வேறு ஒருவருக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதனை அவர் வேறு நபருக்கு விற்று விட்டார். இதனால் குமாரம்பட்டி ஊர் பகுதிக்கு நாங்கள் சென்று வரும் பொதுவழி பாதையை அடைத்து விட்டனர். இதனால் நாங்கள் சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருவதற்கு வழியில்லாமல் தவித்து வருகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தபிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி கடந்த 2 வருடமாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மனுக்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக்கூறி 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மேகநாதன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து கலெக்டர் முன்னிலையில் தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனால் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், அதிகாரிகளும் அவர் மீது உடனடியாக தண்ணீரை ஊற்றி அங்கிருந்து மீட்டு வெளியே அழைத்து சென்றனர். திடீரென கலெக்டர் முன்னிலையில் அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story