search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முற்றுகை
    X
    முற்றுகை

    நெல்லை டவுனில் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

    நெல்லை டவுனில் மஞ்சள் காமாலை பாதிப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி, ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

    எனினும் சில இடங்களில் மஞ்சள் காமாலை தாக்குதல் காணப்படுகிறது. குறிப்பாக நெல்லை டவுன் அப்பர் தெரு, சுந்தரர் தெரு, மாணிக்க வாசகர் தெரு, புட்டாரத்தி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் மஞ்சள் காமாலை அறிகுறி காணப்பட்டது.

    சுகாதாரமற்ற குடிநீரால் மஞ்சள் காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் அனைத்து பகுதி மக்களுக்கும் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.

    குடிநீரில் குளோரின் அளவு கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. அங்குள்ள சாக்கடை அடைப்புகளை அகற்றி சுகாதார பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அப்போது டவுன் பகுதிகளில் மஞ்சள் காமாலை பாதிப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி, ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சி சார்பில் சுகாதார பணிகளை துரிதப்படுத்தப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×