search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    தக்காளி விலை குறைய தொடங்கியது- கிலோ ரூ.60-க்கு விற்பனை

    வரத்து அதிகரிக்க தொடங்கி இருப்பதால் தக்காளி விலை குறையத் தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், சில்லரை கடைகளில் கிலோ ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    போரூர்:

    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்து தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலை திடீரென பல மடங்கு அதிகரித்தது.

    குறிப்பாக வரத்து குறைவால் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியது சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பச்சை காய்கறிகளின் விலையும் வரலாறு காணாத வகையில் தாறு மாறாக அதிகரித்தது.

    இந்த நிலையில் மழை பாதிப்பு குறைந்து மீண்டும் காய்கறி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று 47 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதேபோல் 270 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்திருந்தது.

    வரத்து அதிகரிக்க தொடங்கி இருப்பதால் தக்காளி விலை குறையத் தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், சில்லரை கடைகளில் கிலோ ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ100ஐ கடந்து விற்கப்பட்டு வந்த கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், வெண்டைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலையும் தற்போது குறைய தொடங்கி இருக்கிறது. இனி வரும் நாட்களில் சந்தைக்கு வரும் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து விலை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வரத்து குறைவால் மொத்த விற்பனை கடைகளில் 2 நாட்களுக்கு முன்பு வரை ரூ.300-க்கு விற்ற ஒரு கிலோ முருங்கைக்காய் இன்று விலை குறைந்து ரூ.220-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    தக்காளி-ரூ.60, வெங்காயம்-ரூ.32, சின்ன வெங்காயம்-ரூ.60, உஜாலா கத்தரிக்காய்-ரூ.80, பீன்ஸ்-ரூ.55, ஊட்டி கேரட்-ரூ.65, ஊட்டி பீட்ரூட்-ரூ.60, முள்ளங்கி-ரூ.35, அவரைக்காய்-ரூ.70, வெண்டைக்காய்-ரூ.70, பன்னீர் பாகற்காய்-ரூ.70, கொத்தவரங்காய்-ரூ.70, புடலங்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, சுரக்காய்-ரூ.25, வெள்ளரிக்காய்-ரூ.20, குடை மிளகாய்-ரூ.55, முட்டை கோஸ்-ரூ.20, பாம்பே முருங்கைக்காய்-ரூ.220, முருங்கைக்காய்-ரூ.120, பச்சை பட்டானி-ரூ.40, இஞ்சி-ரூ.18, பச்சை மிளகாய்- ரூ.35.

    Next Story
    ×