search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மழையால் பயிர்கள் பாதிப்பு, சிறப்புக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

    கன மழைக்கு தாங்காமல் நெற்பயிர்கள் வயல்களில் விழுந்தன. கரும்பும் கடுமையாக பாதித்தது.
    உடுமலை:

    உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம், கரும்பு, நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்கள், தோட்டக்கலைத்துறை பயிர்களான சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, பந்தல் சாகுபடி பயிர்களாக பீர்க்கன், பாகற்காய் என பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

    வட கிழக்கு பருவ மழை தொடங்கி கடந்த 2 மாதமாக தொடர்ந்து உடுமலை பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும், நடவு செய்த நாற்றுக்களும் கடுமையாக பாதித்தது.

    மக்காச்சோளம் வளர்ச்சி பாதித்ததோடு வயல்களில் தேங்கிய மழை வெள்ளம் காரணமாக வேர்கள் அழுகி சாய்ந்தன. கதிர்பிடித்த மக்காச்சோளம் பயிர்களில் நிலையிலேயே முளைத்தும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கன மழைக்கு தாங்காமல் நெற்பயிர்கள் வயல்களில் விழுந்தன. கரும்பும் கடுமையாக பாதித்தது. காய்கறி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் முழுமையான இழப்பை சந்தித்துள்ளனர். 

    தக்காளி செடிகள் அனைத்தும் அழுகின. வெங்காய பயிர்கள் முழுமையாக நீரில் மூழ்கின. பீட்ரூட், வெண்டை, கத்தரி, கொத்தமல்லி என அனைத்து காய்கறிகளும் கன மழையால், அழுகியும், காய், பிஞ்சு பாதித்தும், மகசூல் இல்லாமல் பாதித்துள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    ஒவ்வொரு பயிர் சாகுபடிக்கும்  ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை  செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்து வயல்களில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    மக்காச்சோளம், நெல், காய்கறி பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பாதித்துள்ளன. பொருளாதார சேத நிலையை தாண்டி பாதிப்புகள் உள்ள நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    எனவே அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு உள்ள நிலையில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும்.

    இக்குழு அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பி முழுமையான நிவாரணம் பெற்றுத்தரவும், பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×