search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான   புகைப்பட  வாக்காளர் பட்டியலை   கலெக்டர்  வினீத் வெளியிட்ட காட்சி.
    X
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை கலெக்டர் வினீத் வெளியிட்ட காட்சி.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 10,98,857 வாக்காளர்கள்

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 3,63,352 ஆண் வாக்காளர்கள், 3,50,247 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 170 பேர் என மொத்தம் 7,12,770 வாக்காளர்கள் உள்ளனர்.
    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் திருப்பூர்மாநகராட்சி பகுதிகளில் 7.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி திருப்பூர் மாநகராட்சி, காங்கயம், வெள்ளக்கோவில், உடுமலை, தாராபுரம், பல்லடம் ஆகிய 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 3,63,352 ஆண் வாக்காளர்கள், 3,50,247 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 170 பேர் என மொத்தம் 7,12,770 வாக்காளர்கள் உள்ளனர். 5 நகராட்சிகளில் 1,05,241 ஆண் வாக்காளர்கள், 1,12,591 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 20 பேர் என மொத்தம் 2,17,852 வாக்காளர்கள் உள்ளனர். 

    மேலும், மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் 81,917 ஆண் வாக்காளர்கள், 86,311 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 7 பேர் என மொத்தம் 1,68,235 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த வாக்காளர் பட்டியல் வெளியீட்டின்போது மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்ட பலர்உடனிருந்தனர்.

    இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக அரசியல் கட்சியினர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். 

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரவி கூறும்போது,

    மாநகராட்சி பகுதியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஒரு வீட்டில் கணவனுக்கு 31வது வார்டிலும், மனைவிக்கு 32-வது வார்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளது. 

    அதுபோல் 27-வது வார்டுக்கு உரிய சுமார் 3 ஆயிரம் வாக்காளர்கள் 26-வது வார்டுடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஆண், பெண் வாக்குச்சாவடி அமைப்பதிலும் குளறுபடி காணப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே புகார் தெரிவித்தும் மாநகராட்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் உள்ளனர். இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றார்.

    பா.ஜனதா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், வாக்காளர் பட்டியல் காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டது. 

    10.15 மணிக்கு நாங்கள் செல்வதற்கு முன்பே வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டுள்ளார். அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துவிட்டு தி.மு.க.வினரை வைத்து வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது, பாரபட்சமான முறையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. இதை பா.ஜனதா கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×