search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை
    X
    பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை

    பஸ் படிக்கெட்டில் தொங்கியபடி பயணம்: பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று பஸ், ரெயில் பயணம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஊத்துக்கோட்டை:

    பஸ், ரெயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே போலீசார் எச்சரித்து இருந்தனர்.

    எனினும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பஸ், ரெயில்களில் தொடர்ந்து தொங்கியபடி பயணம் செய்தனர்.

    கடந்த சிலநாட்களுக்கு முன்பு கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த ஒரு மாணவியும், மாணவனும் போட்டிபோட்டி ரெயில் பெட்டியின் வாசலில் தொங்கியபடியும், கால்களை பிளாட்பாரத்தில் உரசியபடியும் சென்றனர். இதேபோல் பெரிய பாளையத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து பஸ், ரெயில்களில் ஆபத்தாக தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பள்ளிகளுக்கு அந்தந்த பகுதி போலீசார் சென்று மாணவர்களுக்கு பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று பஸ், ரெயில் பயணம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதன்படி ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கலந்து கொண்டு மாணவர்களிடம் கூறியதாவது:- மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கக் கூடாது. இனி பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் வழக்கு தொடரப்படும்.

    தலைமுடியை அலங்கோலமாக வெட்டக்கூடாது. நல்ல முறையில் சீருடை அணிய வேண்டும். சட்டம்- ஒழுங்கை போலீசார் எப்படி பாதுகாக்கிறார்கள் என்பது பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணவர்கள் அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வரலாம். அப்படி வரும் மாணவர்கள் கோவில் திருவிழாக்களின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது எப்படி என்று கற்றுத்தரப்படும். இப்படிப் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதுபோன்ற சான்றிதழ் வேலை வாய்ப்புக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர், ஆசிரியர் கழக தலைவர் தமிழ்ச்செல்வன், வியாபாரிகள் சங்கத் தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் காமராஜர் சிலை பஸ் நிறுத்தத்தில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் பஸ்களில் படிகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்களை கீழே இறக்கினர்.

    அவர்களுக்கு படிகளில் தொங்கியபடி சென்றால் ஏற்படும் விபத்துக்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவுரை வழங்கி, அடுத்த பஸ்களில் ஏற்றி அனுப்பினர்.

    Next Story
    ×