search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அமராவதி பாசன விவசாயிகள் வசதிக்காக நவீன அறுவடை எந்திரம் - நெல் கொள்முதல் நிலையம்

    அமராவதி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் அறுவடை தொடங்கி உள்ளது.
    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள கல்லாபுரம், ராமகுளம் உட்பட ராஜவாய்க்கால் பாசனத்தில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

    தற்போது உடுமலை வட்டாரம் கல்லாபுரம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. பருவ மழை அதிக அளவு பெய்த நிலையில் தற்போது மழை குறைந்து வெயில் அடித்து வருவதால் அறுவடையை வேகமாக மேற்கொள்ள விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வழக்கமாக அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் அறுவடைக்கு தேவையான எந்திரங்கள் கிடைக்காமலும், அறுவடை செய்த நெல் விற்பனையாகாமல் தேங்குவதோடு குறைந்த விலை தனியார் கொள்முதல் காரணமாக விவசாயிகள் பாதித்தனர்.

    கடந்தாண்டு இப்பிரசினைகளால் விவசாயிகள் கடுமையாக பாதித்த நிலையில் நடப்பாண்டு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தலைமடை பகுதியான கல்லாபுரத்தில் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் மழை பெய்தாலும் நிலங்களில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், சேற்றிலும் அறுவடை செய்யும் திறன் கொண்ட ‘பெல்ட்’ வகை எந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை சார்பில், கல்லாபுரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

    நெல் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், எலையமுத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நெல் நேரடி கொள்முதல் மையம் அமைக்கப்பட உள்ளது.

    இங்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையுடன், ‘ஏ’ கிரேடு நெல் ரகம், குவிண்டால் ரூ. 2ஆயிரத்து 60க்கும், சாதாரண ரகம் ரூ. 2 ஆயிரத்து, 15க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. 

    நாள்தோறும் ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு அதற்குரிய தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அறுவடை எந்திரம் பயன்பாடு மற்றும் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைப்பது குறித்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மகாதேவன், உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது : 

    அமராவதி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் அறுவடை தொடங்கிஉள்ளது. அறுவடைக்கு தேவையான எந்திரங்கள் கிடைக்காதது மற்றும்நெல்லுக்குரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதித்து வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது சேற்றிலும் அறுவடை செய்யும் திறனுடைய ‘பெல்ட் வீல்’ உடன் கூடிய ஒரு எந்திரம் வந்துள்ளது.

    மேலும்  கூடுதல் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்து தருமாறு வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். தனியார் அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணிக்கு, ரூ.3,500 வரை கொடுக்க வேண்டியிருந்தது. வேளாண் பொறியியல் துறை அறுவடைஎந்திரத்திற்கு, மணிக்கு, ரூ.1,630 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் அறுவடை செய்த நெல் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று வந்த சூழலுக்கு தீர்வு காண அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது. மழையில் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் ஈரப்பதம் ஓரளவு திருப்தியாக இருந்தாலும் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கல்லாபுரம் பகுதியில், இரு மாதம் அறுவடை நடக்கும். தொடர்ந்து, எலையமுத்தூர், குமரலிங்கம் என தொடர்ந்து அறுவடை நடக்கும் வாய்ப்புள்ளதால் அறுவடை எந்திரங்கள், நெல் கொள்முதல் மையம் அறுவடை முடியும் வரை செயல்படும். 

    எனவே விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை எந்திரங்கள் வாயிலாக அறுவடை செய்வதோடு, அரசு கொள்முதல் மையத்தில் நெல் விற்பனை செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×